இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில், சமுத்திரகனி நடிப்பில் “எளிய மனிதர்களின் வாழ்வே அறம்” என்ற அடிப்படையில் பல திருப்பங்களுடன் பரபரப்பாக உருவாகியுள்ள “திரு.மாணிக்கம்” திரைப்படம் வெள்ளித்திரையில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வரும் டிசம்பர் 27 அன்று வெளியாகவிருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தின் முன் வெளியீட்டு விழா, திரையுலக முன்னணி பிரபலங்களுடன், படக்குழுவினர் கலந்துகொள்ள  கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்வினில் நடிகர் சாம்ஸ் பேசியதாவது… இம்மாதிரி ஒரு நல்ல படத்தைத் தயாரித்ததற்காக ரேகா ரவிக்குமார், ஜிந்தா கோபாலகிருஷ்ண ரெட்டி மற்றும் ராஜா செந்தில் ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.  இப்படத்திற்குப் பிறகு என் நண்பர் இயக்குநர் நந்தா பெரியசாமி, மோஸ்ட் வாண்டட் இயக்குநர் லிஸ்டில் இடம் பிடிப்பார். மிக அழகான சூட்சமத்தைப் பிடித்துவிட்டார். அவர் தொட்டதெல்லாம் ஹிட்டுதான். சில பேர் மட்டும் தான் நேர்மையான நல்ல விசயத்தைப் பேசப் பொருத்தமாக இருப்பார்கள். சமுத்திரகனி அதற்குப் பொருத்தமானவர். அவர் மிக நன்றாக நடித்துள்ளார். அடுத்ததாக பாரதிராஜா. அவர் ஒரு முறை சிவாஜியிடம் தான் நடிக்க வந்ததாக சொன்ன போது, உங்க ஊரில் கண்ணாடியே இல்லையா ? எனக்கேட்டதாகச் சொல்வார்கள். அவரே இப்போது இருந்திருந்தால் பாரதிராஜா   நடிப்பைப் பார்த்து உச்சி முகர்ந்திருப்பார். விஷால் சந்திரசேகர் அற்புதமான இசையைத் தந்துள்ளார். இப்படி ஒரு அற்புதமான படத்தில் எனக்கும் வாய்ப்பு தந்ததற்கு நன்றி என்றார்.

நடிகை வடிவுக்கரசி பேசியதாவது… இப்படத்தைப் பாராட்டிய அனைத்து உள்ளங்களுக்கும் என் நன்றி. எப்போதும் என்னுடைய கேரக்டர் எல்லாம் போனிலேயே சொல்லிவிடுவார்கள். ஆனால் இயக்குநர் நந்தா பெரியசாமி, நான் வீட்டுக்கு வந்து கதை சொல்கிறேன் என்றார். யாருக்கு அம்மா யாருக்கு பாட்டி என்று தான் கதை கேட்பேன், ஆனால் இவர் வந்து கதை சொன்னதும், தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்து விட்டேன். ஏன் அந்த ஹீரோ அவ்வளவு நேர்மையாக கஷ்டப்பட வேண்டும் எனக்கேட்டேன். என் கேரக்டர் சின்னது தான் ஆனால் என் குரு பாராதிராஜாவுக்கு ஜோடி என்றதும் அவ்வளவு சந்தோசம். சமுத்திரகனியைப் பார்த்து எனக்கு அவ்வளவு பொறாமையாக இருக்கும். தெலுங்கில் வில்லனாகக் கலக்குகிறார். இங்கு இப்படி அற்புதமாக நடிக்கிறார். இந்தப்படம் என்னை வெகுவாக பாதித்துவிட்டது. மிக மிக எதார்த்தமான கதை, எல்லோரும் மிக நன்றாக நடித்துள்ளார்கள். நந்தா என்னை மீண்டும் தட்டெல்லாம் கழுவ வைத்தார் அவ்வளவு வேலை வாங்கினார். ஆனால் படத்தை அவ்வளவு அற்புதமாக எடுத்துள்ளார். எல்லோருக்கும் படம் கண்டிப்பாகப் பிடிக்கும். நான் இந்தப்படத்தில் நடித்தது மிகவும் சந்தோசம். என் குருவோடு நடித்தது இன்னும் சந்தோசம் என்றார்.

கவிஞர் சொற்கோ பேசியதாவது…
இயக்குநர் ஒவ்வொரு படத்திலும் ஒரு பாட்டு வாய்ப்புத் தருவார். இந்தப்படத்திலும் தந்துள்ளார். இந்த மேடையில் இருப்பதே பெருமையாக உள்ளது. இந்தப்படத்தில் நடித்த சமுத்திரகனிக்கு கண்டிப்பாகத் தேசியவிருது கிடைக்கும். இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் தேசிய விருது கிடைக்கும். நான் எழுதிய பாடலுக்கும் தேசிய விருது கிடைக்கும் என்றார்.

இயக்குநர் விக்ரமன் பேசியதாவது… பொதுவாக மலையாளத்தில் நல்ல படம் வருகிறது எனச் சொல்வோம், ஆனால் தமிழில் இந்த வருடம் மிகச்சிறந்த படங்கள் வந்துள்ளது. வாழை, லப்பர்பந்து  படங்களை விட இந்த திரு மாணிக்கம் படம் மிகச்சிறந்த படமாக இருக்கும்.  இந்தப்படத்தின் க்ளைமாக்ஸ் நெகடிவ் இல்லை, நமக்கு என்னானது ஏதானது என்றே புரியாமல் வருவோம் அது தான் இப்படத்தின் வெற்றியாக இருக்கும். தமிழ் சினிமாவில் சிறந்த படமாக இருக்கும். இந்தப்படத்தை நாம் கௌரவப்படுத்த வேண்டும். இயக்குநராக நந்தா பெரியசாமியை ஜெயிக்க வைக்க வேண்டும் என்றார்.

தயாரிப்பாளர் ராஜா செந்தில் பேசியதாவது… இந்தப்படத்தின் கதைக்கு முன் 20 கதைகள் கேட்டிருப்பேன், நந்தா பெரியசாமியிடம் ஒரு ஹீரோயினுக்கு தான் கதை கேட்டேன். கொஞ்ச  நேரத்தில் அழுது விட்டேன். உடனே ரவியிடம் சொன்னேன். அவருக்கும் பிடித்திருந்தது. உடனே ஒரே நாளில் படத்தை செட் செய்து விட்டோம். நேர்மையாக எல்லோரும் வாழ வேண்டும் எனும் விசயம் இப்படத்தில் உள்ளது என்றார்.

பாடலாசிரியர் சினேகன் பேசியதாவது… இது மனதுக்கு மிக நெருக்கமான படம். இயக்குநர் நந்தா பெரியசாமியின் கதைகள் கருவில் உயிர் பெறும்போதே எனக்கு வந்துவிடும். ஒவ்வொரு கட்டத்திலும் கதை வளர வளரச் சொல்வார். நேரம் காலமில்லாமல் அவர் சொல்கிற காட்சியை அத்தனை விவரங்களோடு கேட்க அருமையாக இருக்கும். இந்தக்கதையை  உருவாக்க அவர் எடுத்துக்கொண்ட கடின உழைப்பு பிரமிப்பானது. நேர்மை என்பது தானே அறம், நேர்மையாகத்தானே வாழ வேண்டும் ஆனால் அதைப்  படமாக எடுத்துச் சொல்ல வேண்டிய, இடத்தில், நேர்மையாக இருப்பதையே கொண்டாட வேண்டும் என்கிற நிலையில் நாம் இருப்பது சோகம். நல்லவனுக்கு வாழ்க்கையே இல்லை எனும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில் தான் நேர்மையாக வாழ வேண்டிய அவசியத்தை, மனிதத்தைச் சொல்ல வருகிறது இந்தப்படைப்பு. இதை நாம் அனைவரும் கொண்டாட வேண்டும் என்றார்.

நடிகர் ரவிமரியா பேசியதாவது…
நானும் நந்தாவும் நண்பர்கள், எல்லோரும் இங்கு படம் பார்த்துவிட்டுத் தான் பாராட்டிப் பேசுகிறார்கள். என்னைப் படம் பார்க்கக்  கூப்பிட்ட போது, அமீரே படம் பார்த்து அழுது விட்டார் எனச் சொன்னான் நந்தா, அமீரே அழுது விட்டாரா? எனக்கேட்டேன். படம் பார்த்த பிறகு தான் புரிந்தது. இப்படைப்பிலிருந்த உண்மையும் நேர்மையும் தான் உங்களை அழ வைத்துள்ளது. நந்தா படம் பார்க்கும் எல்லோரையும் அழ வைக்க வேண்டும் என முடிவெடுத்துவிட்டான். அவன் எழுத்து அத்தனை அற்புதமானது. இந்தப்படத்தை எடுத்த தயாரிப்பாளர்களுக்கு என் நன்றி.  சமுத்திரகனி அட்வைஸ் பண்ற ஆள் என சொல்வீர்களே ? அது இந்தப்படத்தில் இல்லை. ஆனால் படம் பார்க்கும் எல்லோரும் அடுத்தவருக்கு அட்வைஸ் செய்வீர்கள் அந்த நிலைமையை இப்படம் ஏற்படுத்தும். பாராதிராஜா எமோசனை கொட்டி நடித்துள்ளார். வடிவுக்கரசி அம்மா வசனமே இல்லாமல் அற்புதமாக நடித்துள்ளார். நேர்மை தான் வெற்றியின் ரகசியம்.  இப்படத்திற்காக நேர்மையாக உழைத்த அனைவருக்கும் நன்றி சொல்கிறேன். இப்படத்தைப் பற்றி தூக்கத்தில் எழுதினால் கூட உங்களால் நேர்மைக்கு மாறாக எழுதிவிட முடியாது. அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்றார்.

நடிகை அனன்யா  பேசியதாவது…
மிக மிகச் சந்தோசமாக உள்ளது. இந்தப்படம் என் மனதுக்கு மிக நெருக்கமான படைப்பு. நந்தா  இந்தக் கதையைச் சொன்னபோதே பிடித்திருந்தது. அவர் எனக்கு மட்டுமல்லாமல், நடித்த ஒவ்வொருவருக்கும் சின்ன சின்ன விசயங்கள் கூடச் சொல்லித் தந்தார். அது எனக்கு நடிக்க மிக உதவியாக இருந்தது. சமுத்திரகனி தான் என்னைத் தமிழ் படத்தில் அறிமுகப்படுத்தினார். அவருடன் நடிக்கக் கொஞ்சம் தயக்கமாக இருந்தது. ஆனால் அவர் எனக்கு நிறையச் சொல்லித் தந்தார். இயக்குநர் மிக அழகாக இந்தப்படத்தை உருவாக்கியுள்ளார். எல்லோரும் சொல்வது மாதிரி மிக நேர்மையான படைப்பு என்றார்.

நடிகர் இயக்குநர் தம்பி ராமைய்யா பேசியதாவது….நான் பேசுவதை விட, இங்கு படம் பார்த்தவர்கள் பேசுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. தம்பி நந்தாவிடம் கதையைத் தோன்றியவுடன் எடுத்து விடு. இம்மாதிரி கதை கிடைக்காது எனச் சொல்வேன். தம்பி லிங்குசாமிக்கு எப்படி ஆனந்தம் படம் அமைந்ததோ அது போல நந்தா பெரியசாமிக்கு இந்தப்படம் இருக்கும். சமுத்திரகனி நடந்து கொள்வது எல்லாம் ஆரம்பத்தில் பார்த்தால் நல்லவனாக நடிக்கிறாரோ என நினைப்பேன். ஆனால் ஒருவனால் தொடர்ந்து நடிக்க முடியாதே அவன் இயல்பிலேயே நல்ல மனதுக்காரன். இந்தப்படத்தில் அசத்தியிருக்கிறான். இது அற்புதமான படம். சமுத்திரகனியை நாயகனாக வைத்து எடுக்கும் ஒரு நல்ல படைப்புக்குப் பணம் போட்ட தயாரிப்பாளர்களுக்கு நன்றி. இந்தப்படம் கண்டிப்பாக அற்புதமான படைப்பாக மக்களைச் சென்றடையும் என்றார்.

கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் பேசியதாவது… இந்த மேடையில் இந்த தருணத்தில் இருப்பதைப் பெருமையாக உணர்கிறேன். பொம்மக்கா நான் எழுதிய பாடல். இன்றைய மனிதர்களுக்கு, இன்றைய வாழ்விற்குத் தேவையான ஒரு விசயத்தை நந்தா பெரியசாமி அழகாக பேசியுள்ளார். இந்தப்படத்திற்குப் பிறகு கண்டிப்பாக நந்தா பெரிய சாமி ஒரு பெரிய இயக்குநராக வருவார். இசையமைப்பாளரும், இயக்குநரும் பேசியபோது, ஒரு கேட்சியான வார்த்தை வைத்து இந்தப்பாடலை உருவாக்கலாம் என்றனர். பொம்மக்கா எனும் அழகான வார்த்தையை வைத்து, இந்தப்பாடலை உருவாக்கினோம்.  தண்ணீர் மற்றும் உணவைப் போல சமூகத்திற்குத் தேவையான ஒரு படைப்பாக இப்படம் இருக்கும் என்றார்.

தயாரிப்பாளர் ரவிக்குமார் பேசியதாவது… ஆந்திர தேசத்திலிருந்து இங்கு வந்து இப்படம் எடுத்துள்ளேன். என் நண்பன் ராஜா செந்தில் தான் இயக்குநரை அறிமுகப்படுத்தி இப்படத்தைப் பற்றிச் சொன்னார். இக்கதை கேட்ட போது நானும் அழுது விட்டேன். அன்றே பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்து விட்டோம். படம் பார்த்தவர்கள் படம் பற்றிச் சொன்னார்கள். கண்டிப்பாக அனைவருக்கும் இப்படம் பிடிக்கும். டிசம்பர் 27 ஆம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது என்றார்.

இயக்குநர் நந்தா பெரியசாமி பேசியதாவது… இந்த திருமாணிக்கம் ஊர் கூடி இழுத்த தேர். இங்கு உள்ள எல்லோரும் இப்படத்திற்காக உழைத்துள்ளார்கள். இந்தக்கதையை முதன்முதலில் திருப்பதி பிரதர்ஸ் சுபாஷ் சந்திரபோஸிடம் தான் சொன்னேன். அவர் முதன் முதலில் பாராட்டிய கதை இது தான். லிங்குசாமி முதல் எல்லோரும் கேட்டுவிட்டு இது படமாக்கப்பட வேண்டிய கதை என்று ஊக்கம் தந்தார்கள். ரவிக்குமார் இந்தக்கதை கேட்டு ஆரம்பித்தார். சமுத்திரகனி கதை கேட்ட உடனே ஷூட்டிங் போகலாம் என என்னை நம்பி வந்தார். அவரால் தான் இந்தப்படம் உருவாகியது. அமீர் எனக்குப் படம் காட்டுங்கள் என்றார் அவர் படம் பார்த்துப் பாராட்டியது பெருமை. பாராதிராஜா ஐயாவை நான் இயக்கியது எனக்குப் பெருமை. சொன்ன கதையைப் படம்பிடித்துத் தந்த சுகுமாருக்கு நன்றி. உயிர் கொடுத்த விஷால் சந்திரசேகருக்கு நன்றி. பாடலாசிரியர்கள் அனைவருக்கும் நன்றி. ரவிக்குமார், ராஜா செந்தில் இப்படத்தைத் தைரியமாக எடுத்ததற்கு நன்றி. ஒரு நல்ல தமிழ் படத்தை எடுத்திருக்கிறார் ரவிக்குமார். அவருக்குத் தமிழ் மக்கள் பத்திரமாகக் கரை சேர்க்க வேண்டும் என்றார்.

நடிகர் சமுத்திரகனி பேசியதாவது, மிக மகிழ்ச்சியான தருணம். தனித்தனியாக எல்லாம் படத்திற்காக உழைப்பதில்லை, எல்லா படத்திற்கும் ஒரே உழைப்பு தான். எல்லோரும் வெற்றிக்காகத் தான் உழைக்கிறோம். பருத்திவீரன், சுப்பிரமணியபுரம் போல் நாம் கண்ட வெற்றியைத் தாண்டத் தான் உழைக்கிறோம். அப்பாவுக்குப் பிறகு ஏழு வருடங்கள் கழித்து இந்தப்படம் கிடைத்துள்ளது. இந்தப்படத்தில் நல்ல மனதுக்காரர்கள் இணைந்தார்கள். சில படங்களுக்கு மட்டும்தான் எல்லாம் தானாக அமையும். நந்தா கதை சொன்ன போது அய்யா பாரதிராஜாவிடம் போய்  சொல் அவர் ஓகே சொன்னால் ஆரம்பித்து விடலாம் என்றேன். அவர் கதை கேட்டு உடனே ஓகே சொன்னார், அப்புறம் ஒவ்வொருத்தராக வந்தார்கள். தயாரிப்பாளர் மிக இனிமையானவர் எப்போதும் சிரித்த முகமாக இருப்பார். நல்ல கதையைப் படமாக்குகிறோம் என்பது மட்டும்தான் அவர் மனதிலிருந்தது. இயல்பாக இருப்பது தான் நேர்மை, எனக்கும் அமீர் அண்ணனுக்குமான உறவும் கூட, அப்படித்தான் ஆரம்பித்தது.  சசியுடனும் அப்படித்தான் ஆரம்பித்தது. உண்மை தான் நேர்மை. நேர்மை என்பது தான் இயல்பு. முன்பெல்லாம் கெட்டவனிடம் சேராதே வம்புல இழுத்து விட்டுவிடுவார்கள். இப்போது நல்லவனைப் பார்த்து அப்படி சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். நந்தா எப்போதும் திடீர் திடீரென அழைப்பார். எப்போது அழைத்தாலும் போவேன். நந்தா என்னை விட நல்லவன். சிலருக்குக் காலம் வெற்றியைத் தரும் அவருக்கு நல்ல காலம் வந்துவிட்டது. கதை படித்தவுடன் நான் நடிக்கிறேன் என்று சொல்லிவிட்டேன். அனன்யா நான் கண்டுபிடித்த பெண் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். அம்மா வடிவுக்கரசி அசத்தியிருக்கிறார். அப்பா பாரதிராஜா என்னைப்பார்த்துப் பண்பட்ட நடிகனாகிட்டே என்று பாராட்டினார். அவரோடு பணிபுரிந்த ஐந்து நாள் வரம். குழந்தைகள் மிக நன்றாக நடித்துள்ளனர். முன்பெல்லாம் சுகுமாரிடம் பதட்டம் தெரியும் ஆனால் இப்போது மிகப்பெரிதாக வளர்ந்துவிட்டார் மகிழ்ச்சி. இத்திரைப்படத்தைப் பற்றிப் பேசிய அனைவருக்கும் நன்றி. இப்படம் கண்டிப்பாக வெல்ல வேண்டும். திருமாணிக்கம் களத்தில் நிற்கும் வெகுஜனத்தை கவரும் என்றார்.

இயக்குநர் அமீர் பேசியதாவது…
எனக்கு நந்தாவுக்கு முன்னால் அவரது அண்ணைத் தெரியும். அவரது ஒரு கல்லூரியின் கதை படம் வருவதற்கு முன்னாலே அந்தப்படம் பற்றி நல்ல பேச்சு இருந்தது. அப்போதே என் கம்பெனிக்கு படம் செய்யுங்கள் என 2 லட்சம் தந்தேன். யோகி படம் நான் செய்யும் போது அதை வேண்டாம் என சொன்னது நந்தா தான். ஒவ்வொரு முறையும் புதிது புதிதாக ஏதாவது செய்துகொண்டே இருப்பார். மாத்தி யோசி என்றே டைட்டில் வைத்து படமெடுத்தார். நந்தாவிடம் உழைப்பு முயற்சி தேடல் இருந்து கொண்டே இருக்கும். சமுத்திரகனியிடம் இதைப்பார்த்துள்ளேன். அதே மாதிரி நந்தாவிடம் பார்த்தேன். இந்தப்படம் பார்த்தேன் இரு காட்சியில் உண்மையில் கண்கலங்கி விட்டேன். படம் வெற்றி பெறுகிறது இல்லை என்பது வேறு விசயம். ஆனால் நாம் அடைய நினைத்ததை செய்து விட்டோமா என்பது தான் முக்கியம் அதை இந்தப்படம் செய்துள்ளது. வாழைக்குப் பிறகு எனக்கு மிக நெருக்கமான படைப்பு. இந்த காலத்தில் நேர்மையாக வாழ்வது என்பதே கடினமாகிவிட்டது. இது நேர்மையை பற்றிப் பேசும் படைப்பு. வறுமையில் நேர்மையாய் வாழ்வது கடினம், அதை சொல்லித்தருவது தான் இந்தப்படம். கமல் சாரையும், சிவாஜி சாரையும் எதிர்த்து நடித்த ஒரே ஆளுமை வடிவுக்கரசி, இதில் பாராதிராஜாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். அசத்தியுள்ளார். பாராதிராஜா சின்ன பாத்திரம் என்றாலும் அத்தனை அற்புதமாக நடித்துள்ளார். அனன்யாவும் சிறப்பாக நடித்துள்ளார். ஒரு நிறைவான படைப்பு. சுகுமார் பிரமாதப்படுத்திவிட்டார். ஒரு நல்ல படைப்பு, தரமான படைப்பு.  நந்தா தனக்கான இடத்தை அடைந்து விட்டார். மனித சமூகத்திற்கான படைப்பு. சமுத்திரகனி இந்த கதாப்பாத்திரத்தை இவனை சிறப்பாக யாருமே செய்துவிட முடியாது. தேர்ந்த  நடிகனாக மாறிவிட்டார் வாழ்த்துக்கள் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *