0 1 min 3 weeks

தமிழ் திரையுலகின் பிரபல டான்ஸ் மாஸ்டரான ஷெரிப் டான்ஸுகாக பிரத்தியேகமான, இந்தியாவின் முதல் OTT தளமான JOOPOP HOME ஐ துவங்கியுள்ளார்.  வடபழனி நெக்ஸஸ் விஜயா மாலில் நடைபெற்ற விழாவில்,  இந்த செயலி (app) அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த செயலி (app)  நடன ஆர்வலர்கள், நடன கலைஞர்கள் மற்றும் படைப்பாளிகள், கலை வடிவத்துடன் எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதில் புதிய  புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.

JOOPOP HOME அறிமுக நிகழ்வில்  திரைப்பட இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி மற்றும் நடிகர் பாபி சிம்ஹா ஆகியோருடன் ஷெரீப்பின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் பங்களிப்பாளர்கள் கலந்து கொண்டனர். பல ஆண்டுகளாக நடனத் துறையில் ஷெரிஃப் ஆற்றி வந்த சிறப்பான பணிகள், இனி இணையம் வழியே நடன உலகில் அனைவரையும் ஊக்குவிக்கும்.

ஷெரீஃப் மாஸ்டரின் வெற்றிக்கான பாதை, அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சிக்கு ஒரு சான்றாகும்.  ஷெரீஃப் 2003 ல் தனது சொந்த நடனப் பள்ளியான ஷெரீஃப் டான்ஸ் கம்பெனி (SDC) மூலம் டான்ஸ்  கற்பிக்கத் துவங்கினார்.  அவர் தனது தனித்துவமான நடனத் திறமையை மேம்படுத்தி, ஆர்வமுள்ள நடனக் கலைஞர்களுக்கு பயிற்சி அளித்துள்ளார். இந்த நிறுவனம் மூலமே நடிகை சாய்பல்லவி டான்ஸில் அறிமுகமானார் என்பது குறிப்பிடதக்கது. 2009 இல், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய உங்களில் யாரு அடுத்த பிரபு தேவா என்ற நடனப் போட்டியில் வென்று, தேசிய அளவில் புகழ் பெற்றார் ஷெரீஃப். இந்த பிரம்மாண்ட வெற்றி அவருக்கு அங்கீகாரத்தை அளித்தது மட்டுமல்லாமல், ஒரு திரைப்பட நடன இயக்குநராக அவரது திரை வாழ்க்கைக்கான கதவுகளையும் திறந்து, பல திரைப்பட வாய்ப்புகளையும் பெற்று தந்தது.

ஷெரீஃப் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடத் திரைப்படங்களில் 250 பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ளார். அதில்  இயக்குநர் ராஜ்குமார் மற்றும்  இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுடன் அவர் பணிபுரிந்த படங்கள் குறிப்பிடத்தக்கவை. ராஜ்குமாரின் சமீபத்திய பிளாக்பஸ்டர் அமரன் படத்தில் ஹிட் பாடல்களுக்கு ஷெரீஃப் நடனம் அமைத்துள்ளார். மேலும் கார்த்திக்குடன் இணைந்து இறைவி முதல் வரவிருக்கும் சூர்யா 44 வரை தொடர்ந்து பணியாற்றி, அவரது படைப்பாற்றல் மற்றும் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தி வருகிறார்.

JOOPOP HOME அறிமுக நிகழ்வில் கலந்து கொண்ட நட்சத்திரங்கள், ஷெரிப்பின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பைப் பற்றிய தங்கள் பார்வையைப் பகிர்ந்து கொண்டனர். கார்த்திக் சுப்புராஜ், ராஜ்குமார் பெரியசாமி மற்றும் பாபி சிம்ஹா ஆகியோர் JOOPOP HOME பற்றிய ஐடியாவை பற்றி, ஷெரிப் சுமார் 6-7 ஆண்டுகளாக பேசிக் கொண்டிருந்ததாக தெரிவித்தனர். இந்த திட்டத்தின் மீது அவர் இடைவிடாத நம்பிக்கை கொண்டு, இறுதியாக உயிர்ப்பித்தது குறித்து, தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

ஷெரீப்பின் பயணம் குறித்து இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி கூறியதாவது, ஆரம்ப காலத்தில் இருந்தே ஷெரீப்பின் அசைக்க முடியாத நடனத் திறமையைக் கண்டு நான் வியந்திருக்கிறேன். 2009 இல் நான் இயக்கிய போட்டியில் கூட, அவருடைய  தனித்த பார்வையும் ஆர்வமும் வெளிப்பட்டது. அவர் JOOPOP HOME ஐத் தொடங்குவதைப் பார்ப்பது, எனக்கு ஒரு பெருமையான தருணம், ஏனெனில் ஒரு மிகப்பெரிய  கனவை காண்பதோடு, அதை அடைய முடியும் என்கிற உற்சாகத்தை இது தருகிறது.

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் கூறுகையில், ஷெரிப் ஒரு நடன இயக்குநர் மட்டுமல்ல, அவர் ஒரு கதைசொல்லி. நாங்கள் இணைந்து பணியாற்றிய ஒவ்வொரு திரைப்படத்திலும் அவரது படைப்பாற்றலால் உயர்ந்து கொண்டே வருகிறது. JOOPOP HOME எனும் இந்த ஆப்  நடனத்தை அடுத்த படிக்கு கொண்டு  செல்வதற்கான அவரது உந்துதலுக்கு ஒரு சான்றாகும்.

டான்ஸ் மாஸ்டர்  ஷெரிப் கூறுகையில், ஆரம்பத்திலிருந்தே நடனம்தான் என் வாழ்க்கை. எனது நடனப் பள்ளியிலிருந்து தொடங்கி, 2009 இல் போட்டி, இப்போது ஒரு திரைப்பட நடன இயக்குநர் என, நான் எப்போதும், அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி பயணிக்க வேண்டும் என்பதில் நம்பிக்கை வைத்திருக்கிறேன். JOOPOP HOME  என்பது சமூகத்திற்கு நான் ஆற்றும் பங்களிப்பாகும், நடனக் கலைஞர்கள் உலகளாவிய அரங்கில் பிரகாசிக்க ஒரு இடத்தை உருவாக்குவதற்கு என்னுடைய ஒரு சிறு முயற்சியாக இது இருக்கும்.

பயிற்சிகள், நிகழ்ச்சிகள், போட்டிகள் மற்றும் நடன உலகில் பிரத்யேகமான திரைக்குப் பின்னால் உள்ள காட்சிகளை வழங்கும், ஒரு விரிவான தளமாக இந்த செயலி செயல்படும். இது அடுத்த தலைமுறை நடனக் கலைஞர்களை ஊக்குவிக்கும் மற்றும் அவர்களுக்கு இணையற்ற வாய்ப்புகளை வழங்கும் என்று ஷெரிப் நம்புகிறார்.

JOOPOP HOME என்பது நடனத்தில் மட்டுமே கவனம் செலுத்தும் இந்தியாவின் முதல் OTT தளமாகும், இது நடனக் கலைஞர்கள் மற்றும் ஆர்வலர்களை மகிழ்விக்கவும், கற்பிக்கவும், ஊக்கப்படுத்தவும் பரந்த அளவிலான உள்ளடக்கத்தை வழங்குகிறது. வளர்ந்து வரும் உலகளாவிய நடன சமூகத்தின் ஒரு பகுதியாக இருக்க வாய்ப்பை வழங்கும், இந்த செயலியை, இப்போது அனைவரும் பதிவிறக்கம் செய்யலாம். ஷெரீஃப் மாஸ்டர் இந்தப் புதிய பயணத்தை துவங்குவது, ஆர்வமும் உறுதியும் இருந்தால், கனவுகளை சாத்தியமாக்க முடியும் எனும்  நம்பிக்கையை தந்து, அனைவருக்கும்  ஊக்கமளிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *