7 MILES PER SECOND’ நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் சாமுவேல் மேத்யூ தயாரிப்பில், சித்தார்த், ஆஷிகா ரங்கநாத் நடிப்பில் தயாராகியுள்ள படம் ‘மிஸ் யூ’. இளமை துள்ளலுடன், துறுதுறுப்பான ரொமாண்டிக் பீல் குட் படமாக உருவாகியுள்ளது. இந்தப்படத்தை ‘மாப்ள சிங்கம்’, ‘களத்தில் சந்திப்போம்’ போன்ற கமர்சியல் படங்களை இயக்கிய N.ராஜசேகர் இயக்கியுள்ளார்.
ஜே.பி, பொன்வண்ணன், கருணாகரன், நரேன், அனுபமா குமார், ரமா, பாலசரவணன், ‘லொள்ளு சபா’ மாறன், சஸ்டிகா என பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்தபடத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
‘மிஸ் யூ’ திரைப்படம் வரும் நவம்பர்- 29ல் திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இப்படத்தைத் தமிழகமெங்கும் வெளியிடுகிறது. இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகர் கார்த்தி இந்தப்படத்தின் ட்ரெய்லரை வெளியிட, நடிகர் சித்தார்த் அதை பெற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்வில் நடிகர் கார்த்தி பேசும்போது, இங்கே வந்து அமர்ந்த கொஞ்ச நேரத்திலேயே எனக்கு அசிஸ்டன்ட் டைரக்டராக வேலை பார்த்த ஞாபகம் வந்துவிட்டது. ஏனென்றால் சித்தார்த் முதல் நாள் படப்பிடிப்பில் சேர்ந்த போது ஒரு ரயில்வே ஸ்டேஷனில் படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருந்தோம். அவன் போய் அங்கிருக்கும் எல்லோருக்கும் நடிப்பு சொல்லிக் கொடுத்துக்கொண்டு இருந்தான். பேக்ரவுண்ட் செக் பண்ணி கொண்டு இருந்தான். மணி சார் தாங்க முடியாமல், டேய் பேசாம அவனை நடிக்க மட்டும் சொல்லுங்கடா என்று சொன்னார். இங்கே வந்தும் பார்க்கிறேன். அதே வேலை தான் நடந்து கொண்டிருக்கிறது. இங்கேயும் லைட்டை திருப்புங்க. கதவை மூடுங்க என. டேய் நீ கொஞ்சம் அமைதியா இருடா என (சித்தார்த்தை பார்த்து கூறுகிறார்).
என்னை சினிமா குடும்பத்தை சேர்ந்தவன் என்று சொல்வார்கள். ஆனால் எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. நான் படித்துவிட்டு உதவி இயக்குநராக சேர்ந்த அந்த சமயத்தில் தான் சித்தார்த், சுதா கொங்கரா, மிலிந்த் எல்லோரும் அங்கே இருந்தார்கள். சினிமா பற்றி அவர்களுக்கு தெரிந்திருந்த விஷயங்கள், அவர்கள் பேசும் விஷயங்களை எல்லாம் பார்க்கும்போது, அய்யய்யோ திரும்பவும் நாம் கடைசி பென்ச் தான் போல இருக்கிறதே. இவர்கள் இவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறார்களே. நாம் எதுவும் தெரியாமல் ஏமாந்து விட்டோமே என்று தோன்றியது. சினிமா எடுக்க வேண்டும் என்றால் சினிமா பார்த்தால் மட்டும் பத்தாது, நிறைய படிக்க வேண்டும். கற்றுக்கொள்ள வேண்டும் என இவர்களுடன் உரையாடியபோது தான் நான் கத்துக்கிட்டேன் என்று சொல்லலாம்.
இந்த படத்தின் டைட்டில் ‘மிஸ் யூ’. நம் பசங்க அதிகமாக யூஸ் பண்ணும் வார்த்தைகள் தான் ‘லவ் யூ’. ‘மிஸ் யூ’. அதுல ரொம்ப கேட்சிங்கான வார்த்தையான ‘மிஸ் யூ’வை படத்தின் டைட்டிலாக வைத்து விட்டீர்கள். பசங்க சோசியல் மீடியாவில் போடும் போஸ்ட்டுகள் எல்லாமே லவ் போஸ்ட்டுகளாக இருக்கின்றன. ஆனால் நாம் ஆக்சன் படங்களாக எடுத்துக் கொண்டிருக்கிறோம். மறுபடியும் ஒரு ஆக்சன் படமாக எடுத்து, ஒரு லவ் ஃபெயிலியர் பாடல் வைத்து, சரக்கு அடிக்கும் காட்சியை வைத்து நான் படித்த காலத்தில் பார்த்த சினிமா போல இது இருக்கிறது.
எனக்கு விஜய் நடித்த துள்ளாத மனமும் துள்ளும் படம் ரொம்பவே பிடிக்கும். அதில் பாடல்கள், காதல், அதை சுற்றி இருக்கும் விஷயங்கள் என இப்போது பார்த்தாலும் அது உற்சாகமூட்டுவதாக இருக்கும். இப்போதும் அது போன்ற படங்களுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால் நாம் எடுப்பது இல்லை. பாய்ஸ் சித்தார்த் என்பதால் அவர் மட்டும் இன்னும் லவ் பண்ணிக் கொண்டிருக்கிறார். பார்ப்பதற்கும் அப்படியே இருக்கிறார் என்பது அவருக்கு ஒரு பெரிய வசதியாக இருக்கிறது. ஜிப்ரான் இசையில் தினேஷ் நடன வடிவமைப்பில் சித்தார்த் நன்றாகவே ஆடி இருந்தார். பாடல்கள் நன்றாக இருந்தது. பார்ப்பதற்கு நான் படித்த காலத்தில் இருப்பது போன்று சிம்பிளாக இருந்தாலும் உள்ளே ஏதோ ஒன்று இருக்கிறது. அப்படி இல்லாமல் சித்தார்த் ஒத்துக் கொள்ள மாட்டார்.
இந்த படத்தின் நாயகி ஆஷிகா ரங்கநாத் தற்போது சர்தார்-2வில் என்னுடன் நடித்துக் கொண்டிருக்கிறார். சிறிய ஊரில் இருந்து வந்தவர் என்றாலும் அவ்வளவு திறமையுடன் மொழி தெரியாவிட்டாலும் சின்சியராக இருக்கிறார். அது எனக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது. இந்த படத்தில் ரொம்ப அழகாக இருக்கிறார்.
பண்ணையாரும் பத்மினியும் குறும்படம் பார்த்ததிலிருந்து பாலசரவணனை பார்த்து யார் அந்த பையன், இப்படி பின்னுகிறானே என யோசித்து இருக்கிறேன். அப்பாவித்தனத்தை வெளிப்படுத்துவது ரொம்பவே கஷ்டமான விஷயம். கொஞ்சம் மீறினாலும் கொட்டாவி விட்டு விடுவார்கள். அப்பாவித்தனத்துடன் சேர்ந்து நகைச்சுவையையும் வெளிப்படுத்தியது எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது.
அதன் பிறகு லப்பர் பந்து என அவர் நடித்த படங்களில் எல்லாம் எல்லா பஞ்ச்சுகளும் சரியான விதத்தில் இறங்கிக் கொண்டே இருக்கும். பாலசரவணன் உங்களுக்கு நிச்சயமாக ஒரு பெரிய இடம் இருக்கிறது. நாம சீக்கிரம் ஒண்ணா ஒர்க் பண்ணுவோம். பசங்க கிட்ட சொல்லிக்கிட்டே இருக்கிறேன். நிச்சயமாக அது நடக்கும் என நம்புகிறேன்.
நானும் கருணாவும் இப்போதுதான் வா வாத்தியாரே படத்தில் நடித்து முடித்து வந்தோம். அவ்வளவு அழகாக காமெடி வசனங்களை டெலிவரி பண்ணுகிறார். நான் எதுவுமே கத்துக்காமல் சினிமாவுக்கு வந்து, இங்கே தான் கத்துக்கிட்டேன். ஆனால் இன்று எல்லோரும் ஷார்ட் பிலிமில் அசத்துகிறார்கள். வரும்போதே தயாராகி வருகிறார்கள். ஜிப்ரான் நாம் இருவரும் தீரன் அதிகாரம் ஒன்று சேர்ந்து பணியாற்றினோம். விரைவில் இன்னொரு படத்தில் இணைவோம். இயக்குநருக்கு இது மூன்றாவது படம். பெரிய வெற்றி பெற வேண்டும்.. சித்தார்த் நண்பன் மிலிந்த்துக்காக படம் பண்ணியதாக இருக்கட்டும் ‘சித்தா’ படத்திற்கு அவ்வளவு கவனம் எடுத்துக்கொண்டு பண்ணியதாகட்டும். அதை புரமோட் செய்த விதமாகட்டும். அதற்கு கிடைத்த பாராட்டுக்களை பார்க்கும்போது ரொம்பவே பெருமையாக இருக்கிறது. சென்னை வெள்ளத்தை மறக்க முடியாது. அதில் நீ செய்த விஷயங்கள் எல்லோருக்கும் ஒரு தூண்டுகோலாக இருந்தது. நல்ல விஷயங்களை திரும்ப திரும்ப பேசிக்கொண்டே இருப்பது அவசியமாக இருக்கிறது என்று கூறினார்.
நாயகன் சித்தார்த் பேசும்போது,
இந்த 2024ல் ஒரு விஷயத்தை வேகமாக பரவ வைக்க வேண்டும் என்றால் நெகட்டிவ்வாக சொன்னால் தான் தீ போல பரவுகிறது. செய்திகளுக்கு வைக்கப்படும் புகைப்படங்கள், டைட்டில்கள், நிகழ்ச்சியின் ஹைலைட்டுகள் எல்லாவற்றிலும் பெரும்பாலும் நெகட்டிவ் விஷயங்கள் தான் வேகமாக பரவுகிறது.
அப்படி ஒரு விஷயத்தை தேட ஆரம்பித்தால் நமக்கே திடீரென ஏதோ ஒன்று மிஸ்ஸிங் ஆகிறது என தோன்றும். அதனால் நான் பாசிடிவையே தேடி போக வேண்டும். ‘மிஸ் யூ’ வெட்டு, குத்து, ரத்தம், வன்முறை, வன்மம் என எதுவுமே இல்லாத ஒரு பாசிட்டிவான ஃபீல் குட் படம். 90களில் விஜய் படங்களை தியேட்டரில் பார்த்து ரசித்த காலத்தில் எல்லா படத்திலும் பாடல்கள் நன்றாக இருக்கும். கலர்ஃபுல்லாக இருக்கும். நல்ல ஒரு பாசிட்டிவான சோசியல் கருத்தையோ, நகைச்சுவை கருத்தையோ, நட்பு, காதல் என நல்ல குணங்களை பற்றி உயர்த்திக் காட்டப்படுகின்ற வகையில் எடுக்கப்பட்ட கமர்சியல் படங்களை தான் நாங்கள் பார்த்து இங்கே வந்திருக்கிறோம்.
இந்த 90ஸ் கிட்ஸ், 2கே கிட்ஸ் இவற்றில் பெரிதாக எனக்கு வித்தியாசம் தெரியாது, எனக்கு ஐபோன்-14-க்கும் ஐபோன்-16க்குமே வித்தியாசம் தெரியாது. இந்த படத்தில் 90ஸ் கிட்ஸ் தான் கேரக்டர்களாக இருப்பார்கள். இந்த படத்தின் கதையை சொல்வதற்காக இயக்குனர் ராஜசேகர் வந்தபோது காதல் கதை என்றதுமே, தயவு செய்து வேண்டாம். பத்து வருடமாக அந்த பக்கமே நான் தலை வைத்து படுக்கவில்லை என்றேன். காரணம் தெலுங்கில் அதுபோல நிறைய பண்ணி வேறு எந்த படங்களும் எனக்கு வராமல் போய் எதற்கெடுத்தாலும். காதல் கதைகள் மட்டுமே வந்தது. என்னால் அது மட்டும் தான் பண்ண முடியும் என்கிற ஒரு நெருக்கடிக்கு ஆளாக்கி விட்டார்கள். லெட்டர் கூட எழுதி வைக்காமல் அப்போது காதலை விட்டு ஓடி வந்தவன் தான். இன்னும் அந்த பக்கம் போகவே இல்லை. காதலில் சொதப்புவது எப்படி தான், நான் கடைசியாக நடித்த முழுக்க முழுக்க காமெடி ரொமான்ஸ் படம். அது கூட நான் முதலில் தயாரித்த படம் என்பதால். அதற்குப் பிறகு வேறு எதுவும் பண்ணவில்லை.
சரி கதை சொல்லுங்கள் எப்படியும் நோ தான் சொல்லப்போகிறேன் என்றேன். அவர் எடுத்ததுமே உலகத்திலேயே உங்களுக்கு பிடிக்காத ஒரு பெண்ணிடம் காதலை சொல்ல போகிறீர்கள் என்றார். இதை கேட்டதும் சரி என ஒப்புக் கொண்டாலும் அவரிடம் நீங்களும் நானும் பார்க்காத ஒரு காதல் படமாக இதை எடுப்போம். ஏற்கனவே அரைத்த மாவையே அரைக்க நாம் இருவருமே தேவையில்லையே என்று கூறிவிட்டேன். அப்படி எடுத்தால் தான் இந்த காலத்து பசங்க கிரிஞ்ச் என சொல்லாமல் இருப்பார்கள்.
கடந்த பத்து வருடங்களில் நிறைய லவ் படங்கள் ஜெயித்து இருக்கின்றன. அதனால் இதை எடுத்தோமா என்றால் இல்லை. இது கதையை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட படம். காதல் கதைகளுக்கு காலம் தாண்டிய ஒரு வரவேற்பு இருந்து கொண்டே இருக்கும். எனக்கும் அது தெரியும். நான் தெலுங்கில் நடித்த போது என்னுடைய காதல் படங்களை பார்த்த ரசிகைகள் இன்று திருமணம் செய்து கொண்டு குழந்தை குட்டிகளுடன் இருக்கிறார்கள். அவர்கள் இப்போதும் என்னை பார்க்கும்போது நீங்கள் ஏன் காதல் படத்தில் நடிப்பதில்லை என்று கேட்கிறார்கள். அவர்கள் அதற்கு சொல்லும் காரணம், நாங்கள் எல்லாம் வாழ்க்கையில் ஒரு நல்ல பையனை செலக்ட் பண்ணி திருமணம் செய்து வாழ்க்கை நடத்திக் கொண்டிருப்பதில் உங்களுடைய தூண்டுதலும் பங்களிப்பும் இருக்கிறது. ஏனென்றால் எப்போதுமே நீங்கள் நல்ல பசங்க, அவர்களுடைய பிரச்சினைகள் பற்றி பேசி இரண்டு பேர் எதற்காக லவ் பண்ண வேண்டும் ஒரு பெண்ணிற்கு ஒரு பையனை ஏன் பிடிக்க வேண்டும் என்கிற காரணங்களை ரொம்பவே நியாயமாக சொல்லி இருப்பீர்கள். நாங்கள் எங்கள் பையன்களை கூட உங்களது படங்களை காட்டித்தான் வளர்க்கிறோம் என்றார்கள்.
சொல்லப்போனால் எல்லா ஜேனர் கதைகளையுமே மீண்டும் திரும்ப ஒருமுறை எடுக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது. அடுத்து வரப்போகும் புதிய தலைமுறை இளைஞர்களுக்கு காதல் என்றால் என்ன, நாம் ரசித்த விஷயங்கள் என்ன என்பதை சரியாக புரிந்து கொள்ளும் விதமாக நாம் காட்ட வேண்டும். இது எழுத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாக இருக்கும். ரியாலிட்டி சம்பந்தப்பட்ட விஷயமாகவும் அதே சமயம் சினிமாவுக்கான அழகு இரண்டுமே இதில் இருக்கும். அதனால் தான் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இந்த படத்தை தைரியமாக வெளியிட இருக்கிறார்கள்.
கார்த்தியை பற்றி இங்கே ஒரு விஷயம் சொல்ல வேண்டும். சர்தார் 2 நைட் ஷூட்டிங் வைத்துக் கொண்டு எனக்காக இப்போது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தான். மணி சார் படத்தில் நாங்கள் இருந்த சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த விஷயங்களை பற்றி சொன்னவன் ஒரு விஷயத்தை சொல்ல மறந்து விட்டான். அப்போது நான் கார்த்தியிடம் நீயும் என்னை போல ஒரு நடிகனாகத்தானே ஆகப்போகிறாய் என்று கேட்டேன். ஆனால் அதற்கு கார்த்தி நானெல்லாம் உன்னை மாதிரி இல்ல மச்சி, நான் டைரக்ஷனில் தான் போகஸ் ஆக இருக்கிறேன். நான் பண்ணினால் டைரக்சன் தான் என்று சொன்னான். ஆனால் கொஞ்ச நாளிலேயே பருத்தி வீரன் பட அறிவிப்பு வருகிறது. அப்போது நான் போன் பண்ணினால் எடுக்கவே பயந்தான். அதன் பிறகு ஏதோ சொல்லி சமாளித்தான். இந்த நட்பு இப்போது வரை தொடர்கிறது.
நான் சமீப காலத்தில் பார்த்த ரொம்ப ரொம்ப பாசிட்டிவான படம் ‘மெய்யழகன்’. அந்த மாதிரி ஒரு படத்தை ஒப்புக்கொண்டு கமர்சியல் ஹீரோவான கார்த்தி அதில் நடித்து வெளிவந்தது உண்மையிலேயே ஹேட்ஸ் ஆப் கார்த்தி. படம் பார்த்துவிட்டு நீண்ட நேரம் அழுதபடி கார்த்தியிடம் உணர்ச்சிகளை கொட்டினேன். அதை கார்த்தியும் ரொம்பவே ரசித்து கேட்டான்.
இந்த படத்தின் டிரைலரை கார்த்தி வெளியிடுவதன் மூலம் ரசிகர்களிடம் ஒரு பாசிட்டிவான அதிர்வுகளை கொண்டு செல்ல முடியும் என்பதால் தான் இதை ‘மெய்யழகன்’ தான் வெளியிட வேண்டும் என அழைத்தேன். சித்தா என்கிற படத்தை நான் எடுத்து முடித்து பொதுமக்களின் ஆதரவுடன் வெற்றி படமாக அமைந்தது. ஆனால் அந்த படம் எடுப்பதற்கு எனக்கு இரண்டு வருடம் ஆனது. அந்த படத்தின் கதை மீதான நம்பிக்கை வைத்து அதை உணர்ந்து அந்த சமயத்தில் நான் கொஞ்சம் சீரியசான ஒரு இடத்தில் இருந்தேன். அடுத்து நான் கேட்கும் கதை ஜாலியாக இருந்தால் நன்றாக இருக்கும். சந்தோசமாக சிரித்துக் கொண்டு சூட்டிங் போய் வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். அந்த வகையில் இந்த ‘மிஸ் யூ’ படத்தின் படப்பிடிப்பு தளம் ரொம்பவே கலகலப்பாக இருந்தது.
கருணாகரனும் நானும் ஜிகர்தண்டா படத்தில் இருந்து நண்பர்களாக ஊறி விட்டோம். எல்லா விஷயத்திலும் தான். கருணாகரனிடம் எனக்கு பிடித்தது அவருடைய குரல். இந்த படத்தில் நண்பன் என்றால் இப்படி கூட இருப்பார்களா என்று நினைக்கும் அளவிற்கு அவர் கதாபாத்திரம் இருக்கிறது. இந்த படத்தை மூன்று தலைமுறையை சேர்ந்த குடும்பத்தினர் போய் பார்த்தாலும் அவர்கள் மூவருக்குமே இந்த படம் தொடர்பு படுத்தி பார்க்கக் கூடியதாக இருக்கும். சஷ்டிகா இந்த படத்தில் தோழியாக நடித்துள்ளார். எங்க பிரெண்ட்ஸ் குரூப்பிலேயே அதிகம் படித்த புத்திசாலி டாக்டர் கதாபாத்திரம் அவருடையது தான். பால சரவணன், சஷ்டிகா இருவரும் செட்டில் அடிக்கும் லுட்டிகள் காமெடி தாங்க முடியாத அளவிற்கு இருக்கும். படத்திலும் அதே எனர்ஜியை கொண்டு வந்திருக்கிறார்கள். பால சரவணன் ஒரு அற்புதமான நடிகர். லப்பர் பந்து படத்தில் அவர்கள் கதாபாத்திரம் எனக்கு ரொம்பவே பிடித்தது.
இப்போது இங்கே அமர்ந்திருக்கும் இந்தப்படத்தின் நடிகர்கள் 20 வருடம் கழித்தும் தமிழ் சினிமாவில் நல்ல நகைச்சுவை நடிகர்கள், நல்ல குணச்சித்திர நடிகர்கள் என்கிற பெயரோடு இருப்பார்கள். நான் இப்போது சொன்ன விஷயங்கள் இந்த படத்தை பார்ப்பதற்கு காரணங்களாக இருந்தாலும் இரண்டாவது முறை இந்த படத்தை பார்ப்பதற்கு ஆவலாக தூண்டும் நபராக நிச்சயமாக கதாநாயகி ஆஷிகா ரங்கநாத் தான் காரணமாக இருப்பார். சுப்புலட்சுமி என்கிற கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். ஒரு லவ் ஸ்டோரி ஒழுங்காக ஒர்க் பண்ண வேண்டும் என்றால் அதற்கு முக்கிய காரணம் ஹீரோயின் செலக்சன் சரியாக இருக்க வேண்டும். அவர்கள் நடிப்பு சரியாக இருக்க வேண்டும். அப்படி அழகான ஹீரோயின் அழகாக நடித்து விட்டால் அந்த லவ் ஸ்டோரி தானாகவே ஜெயித்து விடும். படத்தில் நாங்கள் இருவரும் சேர வேண்டும் என ரசிகர்கள் ஏங்குவார்கள் என்கிற விதமாகத்தான் நாங்கள் நடித்து இருக்கிறோம்.
ஆஷிகா தமிழில் இடைவெளி விடாமல் படம் பண்ண வேண்டும் என நான் விரும்புகிறேன். அவர் சின்ன வயதில் இருந்தே நான் உங்களுடைய ரசிகை என்று சொல்லி என்னை அடிக்கடி கிண்டலடித்து கொண்டே இருப்பார். இப்படி ஒரு ரசிகையுடன் நடிப்பது இதுதான் எனக்கு முதல் தடவை. அப்படி ஒரு ரசிகை பக்கத்தில் இருப்பது நல்லது தான். நமக்கு ஆலோசனைகள் சொல்வதற்கு உதவியாக இருக்கும். அடுத்த படத்தில் என்னுடன் 3 பாடலுக்கு நடனம் ஆட வேண்டும் என பிராமிஸ் வாங்கி இருக்கிறார். இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு அது மறுக்கவே முடியாத ஒரு நிகழ்வாக இருக்கும். நண்பர்களுடன் சேர்ந்து பீச்சில் ஜாலியாக ஸ்வீட் காரம் காபி சாப்பிட்டுவிட்டு அந்த இரவு நிம்மதியாக தூங்கினால் உங்களுக்கு எப்படி இருக்குமோ அந்த ஒரு உணர்வை இந்த படம் நிச்சயம் உங்களுக்கு கொடுக்கும் என்று கூறினார்.
நடிகர் கருணாகரன் பேசும்போது,
இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காகவே வந்த கார்த்திக்கு நன்றி. அவருடைய ‘மெய்யழகன்’ படம் திரும்பத் திரும்ப பார்த்தேன். ஒரு படம் முழுவதும் ரொம்பவே அப்பாவியாக நடிப்பது எவ்வளவு கஷ்டமான விஷயம். அற்புதமாக நடித்திருந்தார் கார்த்தி. இந்த மிஸ் யூ படம் எனக்கு ஒரு முக்கியமான படமாக இருக்கும் என நம்புகிறேன். ஜிகர்தண்டாவுக்கு பிறகு நீண்ட நாள் கழித்து மீண்டும் சித்தார்த்துடன் எனக்கு ஒரு ஜாலியான நண்பன் கதாபாத்திரம். காதலுக்கு நண்பர்கள் தேவை. ஆனால் சில நேரம் ஏன்டா இப்படி என்கிற மாதிரி சில நண்பர்கள் இருப்பார்கள். நான் அப்படி ஒரு கதாபாத்திரத்தில் தான் நடித்திருக்கிறேன். படப்பிடிப்பில் ஆஷிகா மட்டும்தான் ரொம்பவே சின்சியராக வேலை பார்ப்பார். நாங்கள் கூட அவ்வப்போது ஓபி அடித்து விடுவோம் இவர்களுடன். மாறன், சஷ்டிகா, பால சரவணன் என டீமாக வேலை பார்த்தது மகிழ்ச்சி என்றார்.
நடிகர் பால சரவணன் பேசும்போது, கனா காணும் காலங்கள், ராஜா மந்திரி காலத்தில் இருந்தே இயக்குநர் ராஜசேகரன் என்னுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என சொல்லிக் கொண்டிருப்பார். அப்படி ‘களத்தில் சந்திப்போம்’ படத்தில் எனக்கு ஒரு நல்ல கதாபாத்திரம் கொடுத்தார். அதன் பிறகு தற்போது ‘மிஸ் யூ’ படத்தில் ரொம்ப ரொம்ப சிறப்பான ஒரு கதாபாத்திரத்தை கொடுத்துள்ளார். தான் ஏதாவது ஒரு கதைக்கான ஒன்லைன் பிடித்து விட்டால் கூட என்னிடம் போனில் பேசி பகிர்ந்து கொள்வார். சித்தார்த் நடித்த படங்களில் ஜிகர்தண்டா எனக்கு ரொம்ப பிடித்த படம். நானும் மதுரைக்காரன் என்பதால். அதில் கருணாகரன் நடித்த ஊர்ணி கதாபாத்திரம் எனக்கு ரொம்ப ஏக்கமாக இருக்கும். இந்த கதாபாத்திரத்தில் நான் நடித்திருக்கலாமே என்று. ஸ்பாட்டில் அந்த அளவிற்கு நன்றாக கவனித்துக் கொண்டார் சித்தார்த். ஒருநாள் பசிக்கிறது என்று சொல்லிவிட்டேன். ஒரு மணி நேரத்தில் பல ஐட்டங்களை கொண்டு வந்து அடுக்கிவிட்டார். அதுமட்டுமல்ல நிறைய விஷயங்களை பகிர்ந்து கொள்வார். அதில் பல எனக்கு உதவியாக இருந்திருக்கின்றன.
படத்தின் தயாரிப்பாளர் மோனிகா. நான் சிறுவயதில் வானிலை அறிக்கை பார்க்கும் காலத்திலிருந்து அவரது ரசிகன். வானிலை அறிக்கைக்கு என்றே ஒரு ரசிகர் கூட்டத்தை கூட்டியவர் அவர். ஆஷிகா ரங்கநாத் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். இங்கு பேசும் எல்லோருமே அவரது நடிப்பு பற்றி குறிப்பிட்டு பேசுகிறோம். படம் வெளியான பிறகு நிச்சயமாக ரசிகர்கள் மத்தியில் அவரது நடிப்பு பேசப்படும். நான், கருணாகரன், மாறன் எல்லோரும் செட்டில் அடிக்கும் கலாட்டாக்களை கட்டுப்படுத்துவதே இயக்குநருக்கும் சித்தார்த்திற்கும் பெரிய வேலையாக இருக்கும். இந்த படம் நிச்சயம் குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய ஒரு பீல் குட் படமாக இருக்கும் என்று கூறினார்.
கதாநாயகி ஆஷிகா ரங்கநாத் பேசும்போது, ( கன்னடத்து பெண்ணான ஆஷிகா தமிழில் பேசி அசத்தி கை தட்டல் பெற்றார் ) மிஸ் யூ’ எனது இரண்டாவது படம். இதுபோல இன்னொரு படம் எனக்கு கிடைத்திருக்குமா என்று தெரியாது. எல்லோரும் என்னுடைய சின்சியாரிட்டி பத்தி பேசினார்கள். அது இந்த சுப்புலட்சுமி கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு எனக்கு ரொம்பவே பொறுப்பை அதிகப்படுத்தியது. இது வழக்கமான ஒரு லவ் ஸ்டோரி அல்ல. பொதுவாகவே கதாநாயகிகளுக்கு லவ் ஸ்டோரி ரொம்பவே முக்கியம். காரணம் கதாநாயகர்களுக்கு இணையாக நாம் நடிப்பதற்கு வாய்ப்பு அதிகம் இருக்கும். இந்த படத்தில் அந்த சுப்புலட்சுமி கதாபாத்திரத்திற்கு நான் சரியான நியாயம் செய்திருக்கிறேன் என நம்புகிறேன்.
முதலில் சித்தார்த்துக்காக இந்த படத்தில் நடிக்க நினைத்தேன். ஆனால் எனக்கு கதாபாத்திரமும் நன்றாக அமைந்து விட்டது. சுப்புலட்சுமி ஆக என்னை மாற்ற பயிற்சி அளித்ததற்கும் சுப்புலட்சுமி ஆக மாற்றியதற்கும் ரொம்ப நன்றி. படத்தில் என்னை இரண்டு இயக்குநர்கள் இயக்கினார்கள் என்று சொன்னால் தவறாகாது. கேமராவுக்கு பின்னால் இயக்குநர் ராஜசேகரன் என்றால், கேமராவுக்கு முன்னால் சித்தார்த்தும் எனக்கு முக பாவனை, வசனங்கள் என எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்தனர். இயக்குநர் ராஜசேகர் ரொம்பவே பர்ஃபெக்சன் பார்ப்பார். தனக்கு தேவையானது வரும் வரை விட மாட்டார். ஒரு நடிகையாக எனக்கு அது சவாலாக இருந்தது என்றார்.
இசையமைப்பாளர் ஜிப்ரான் பேசும்போது, எனக்கு தொடர்ந்து சீரியஸ் கதைகள், சைக்கோ கதைகளாக வந்து கொண்டிருந்த சமயத்தில் தான் இந்த படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு வந்தது. இயக்குநர் ராஜசேகர் கதை சொல்ல துவங்குவதற்கு முன்பே, லவ் பாடல்கள் இருந்தால் நாம மேற்கொண்டு பேசலாம் என்று சொன்னேன். ஏனென்றால் காதல் பாடல்கள் பண்ணுவதை நான் ரொம்பவே மிஸ் பண்ண ஆரம்பித்து விட்டேன். ஆனால் இயக்குநர் இந்த படத்தில் ஐந்து பாடல்கள் இருக்கிறது என்று சொன்னார் பின் அது எட்டு பாடல்களாக மாறிவிட்டது. சித்தார்த்தை ஒரு ரொமாண்டிக் ஹீரோவாக ரொம்பவே பிடிக்கும். இன்னொரு பக்கம் அவருக்கு இசையறிவு அதிகம் இருக்கிறது. அவருடைய படங்களில் பாடல்களுக்கு ஒரு முக்கியத்துவம் இருக்கும். அதை மேட்ச் பண்ண வேண்டும் என்கிற ஒரு அழுத்தம் எனக்கும் இருக்கவே செய்தது. அவருக்காக நாங்கள் திட்டமிட்ட பாடல் வேறு. இப்போது அவர் பாடியுள்ள நீங்க பார்த்த பாடல் வேறு. இதுதான் அவருக்கு சரியாக இருந்தது. இந்த கதையை இயக்குநர் சொல்லும்போது ஒரு சீரியஸான சீன் இருக்கும். ஆனால் அதை புன்னகையுடன் சொல்வார். அவரிடம் இது சீரியஸான கட்சியா இல்ல காமெடியா என்று கூட கேட்டேன். காரணம் படத்திற்குள் ஒரு ஹியூமர் ஓடிக் கொண்டே இருக்கும். அது கதை கேட்கும்போது இருந்ததை விட, படமாக பார்க்கும் போது நன்றாக புரிந்தது என்று கூறினார்.
தயாரிப்பாளர் சாமுவேல் மாத்யூ பேசும்போது, 2011ல் நாளைய இயக்குனர்கள் சீசன் 1ல் ஐந்து பேர் ஃபைனலிஸ்ட். கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி, அஜய் ஞானமுத்து, பாலாஜி மோகன், ஐந்தாவதாக சாமுவேல் மேத்யூ. அது நான். மற்ற எல்லோருமே படம் பண்ணி விட்டார்கள். அதிலும் சித்தார்த்தை வைத்து படம் பண்ணினார்கள். 13 வருடம் கழித்து நான் அந்த சைக்கிளை பூர்த்தி செய்கிறேன். சித்தார்த்திடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். குறிப்பாக அவர் பெண்களை மதிக்கும் விதத்தை பார்த்து நான் ரொம்பவே பெருமைப்படுகிறேன். படத்தில் ஒரு காட்சியில் கதாநாயகியை அடிக்க வேண்டும். ஆனால் சித்தார்த் மறுத்துவிட்டார் என தகவல் வந்தது. எனக்கு கூட சித்தார்த் மேல் கொஞ்சம் கோபம் இருந்த்தது. ஆனால் படம் பார்த்தபோது அடிக்காமல் அந்த காட்சியில் அவர் அவ்வளவு பெர்ஃபெக்டாக நடித்திருப்பார். அவர் அடித்திருந்தால் கூட இவ்வளவு நன்றாக வந்திருக்காது. படம் நீங்கள் பார்த்தால் உணர்வீர்கள்.
இந்த படம் சொன்ன பட்ஜெட்டுக்கு மேல் கொஞ்சம் அதிகமாகத்தான் போய்விட்டது. ஆனால் இயக்குநர் ராஜசேகர் ஒரு ட்ரிக் வைத்திருக்கிறார். பட்ஜெட் அதிகமாகும் போதெல்லாம் என்னை அழைத்து ஒரு பகுதி படத்தை போட்டு காட்டுவார். அதன் பிறகு இன்னும் கொஞ்சம் தேவை என்பார். படமும் அவ்வளவு நன்றாக வந்திருப்பதால் நானும் சரி என்று சொல்லிவிடுவேன். இந்த படத்தின் மேக்கிங் சமயத்தில் படத்தை பலமுறை பார்த்தேன். ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் தன்னம்பிக்கையின் அளவு கூடிக் கொண்டே இருந்தது. நாம் நிச்சயமாக ஏதோ ஒரு நல்லதை தான் செய்து கொண்டிருக்கிறோம் என்று தோன்றியது. இந்த படத்தை பார்த்ததும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இதை உடனடியாக வெளியிட முன் வந்ததும் எங்களுக்கு ஏதோ ஒரு கல்லூரியில் படித்து பட்டம் பெற்றது போல ஒரு உணர்வு ஏற்பட்டது. அதேபோலத்தான் சர்வதேச பார்ட்னராக ஐங்கரனும், ஒடிடி பாட்னராக அமேசானும் இணைந்ததில் இன்னும் அதிக மகிழ்ச்சி என்றார்.
இயக்குநர் N.ராஜசேகர் பேசும்போது, இதற்கு முன்னாடி நான் இரண்டு படங்கள் பண்ணியிருக்கிறேன். ஆனால் இதுதான் எனக்கு முதல் மேடை. என் நண்பன் வாழ்க்கையில் நடந்த ஒரு விஷயம் தான் இந்த கதைக்கு எனக்கு இன்ஸ்பிரேஷனாக அமைந்தது. அதிலிருந்து தான் இந்த கதை உருவானது. இதை என் குடும்பத்தாரிடம் சொன்னபோது இந்த கதையைத்தான் நீ அடுத்து படமாக இயக்க வேண்டும் என உறுதியாக சொல்லிவிட்டார்கள். எல்லா காதலுக்கும் நட்பும் குடும்பமும் உதவி செய்வார்களா எனக்கு தெரியவில்லை. ஆனால் இந்த காதல் கதைக்கு இரு தரப்பிலும் எனக்கு உற்சாகம் கொடுத்தார்கள். இந்த கதையை தயாரிப்பது சாம், மோனிகா இருவரிடம் சொன்னபோது மோனிகா கதை ஓகே சொல்ல, உடனடியாக பட்ஜெட் எல்லாம் கணக்கு போட ஆரம்பித்து விட்டார், சாம். அப்போதே அவர் இந்த படத்திற்குள் வந்து விட்டார் என புரிந்தது. நான் இதற்கு முன் ஆர்பி.சவுத்ரியிடம் பணியாற்றி இருக்கிறேன். அவர் ஒரு விஷயத்தை எடுத்து விட்டால் அதை அழகாக முடிப்பார். அதே போலத்தான் சாமுவேல் மாத்யூவும். ஒரு விஷயத்தை செய்ய முடியும் என்றால் மட்டுமே அதை ஒப்புக் கொள்வார். அவருக்கும் எனக்கும் பல விஷயங்களில் ஒத்து வராது. எங்கள் இருவருக்கும் ஒத்து வந்த விஷயம் என்றால் இந்த படத்தின் கதை தான்.
இந்தக் கதை உருவாக்குவதற்கு என் நண்பர் அசோக் ரொம்பவே உறுதுணையாக இருந்தார். எனது படங்களில் தொடர்ந்து அருமையான வசனங்களை கொடுத்து வருகிறார். வாகை சூட வா படத்தில் இருந்து நான் இசையமைப்பாளர் ஜிப்ரானின் ரசிகர். அவரது அடுத்தடுத்த படங்களை பார்த்து நாம் படம் பண்ணும் போது இவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என நினைத்தேன். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் என்னுடைய சாய்ஸ் ஆகத்தான் இருந்தது. ஒளிப்பதிவாளர் பி.ஜி வெங்கடேஷ் உடன் கதை உருவாக்கத்திலேயே நிறைய பேசி விட்டோம். அதனால் படப்பிடிப்பில் என் கண்களைப் பார்த்தாலே என்ன தேவை என்பதை அவர் புரிந்து கொள்வார்.
இந்த படத்தின் நாயகி ஆஷிகாவை முதன் முதலில் ஒரு பேட்டியில் தான் பார்த்தேன். அவரது படங்களை பார்த்ததில்லை. என்னை பொறுத்தவரை ஒருவரின் இயல்பான கேரக்டரை பார்த்து தான் அவர்களை இந்த படத்திற்காக அதிக அளவில் தேர்ந்தெடுத்து இருக்கிறேன். அந்த விதமாக ஆஷிகா பேட்டியில் பேசுவது மற்றும் அவரது ரீல்ஸ் வீடியோ ஆகியவற்றை பார்த்துவிட்டு தான் இந்த கதாபாத்திரத்திற்கு அவர் சரியாக இருப்பார் என நான் நம்பினேன். நான் எதிர்பார்த்ததை விட சூப்பராக செய்து கொடுத்திருக்கிறார்.
நடிகர் பால சரவணன். வடிவேலு, விவேக் இருவரும் சேர்ந்த கலவையாக நான் பார்ப்பேன். அவரை நீங்கள் கிராமத்துக் கதைக்கும் பயன்படுத்தலாம். சிட்டி சப்ஜெட்டுக்கும் பயன்படுத்தலாம். இரண்டுக்குமே அவர் அழகாக பொருந்துவார். குறிப்பாக விலங்கு சீரிஸில் அவரது நடிப்பு என்னை ரொம்பவே கவர்ந்தது. ‘லப்பர் பந்து’ படம் பார்த்தவர்கள் பால சரவணன் உங்கள் படத்தில் இருப்பது படத்திற்கு ரொம்பவே பிளஸ் என்று சொன்னார்கள். இந்த படத்தில் சித்தார்த்தின் ஃபிரண்டு என எதுவுமே நான் காட்சிகளை உருவாக்கவில்லை. கருணாகரனை பார்க்கும்போதே நமக்கு டக்கென ஒரு ஃப்ரெண்ட் பீல் வந்துவிடும். இந்த கதாபாத்திரத்திற்கு சித்தார்த்தும் கருணாகரனை தான் டிக் செய்தார்.
வெறும் ஆண் நண்பர்களாக மட்டுமே இருக்க வேண்டாம். ஒரு பெண் நண்பியையும் சேர்த்துக் கொள்ளலாம் என்பது சித்தார்த் சொன்னார். அது போல் சஷ்டிகாவை இந்த படத்தில் சித்தார்த்தின் நட்பு வட்டத்தில் சேர்த்தோம். மிகச் சிறந்த நடிகை. ஆனால் அவரை கட்டுப்படுத்துவது தான் கொஞ்சம் சிரமம். இந்த படம் ஆரம்பிப்பதற்கு காரணம் சாமுவேல் மாத்யூ. ஆனால் இந்த படம் நன்றாக வந்துவிடும் என நம்பியவர் நடிகர் சித்தார்த். அவர் எப்போதுமே ஒரு பாசிட்டிவ்வான மனிதர். அவர் உள்ளே வந்த பிறகுதான் எல்லா பாசிட்டிவான விஷயங்களும் நடந்தது. அவர் சாக்லேட் பாய் மட்டுமே இல்லை. எல்லா கதாபாத்திரங்களையும் சிறப்பாக பண்ணக்கூடியவர். சுருக்கமாகச் சொன்னால் நடிப்பு என்பது நடிப்பதே தெரியாமல் பண்ண வேண்டும் என்பார்கள். அது சித்தார்த்திடம் இருக்கிறது. இவர் நல்ல நடிகர் மட்டும் இல்லை. நல்ல பாடகரும் கூட. இந்த படத்தில் ஒரு பாடல் பாடுகிறேன் என்றார். ஆனால் இரண்டு பாடல் பாட வைத்து விட்டோம். அவரு தேதி கிடைத்திருந்தால் மூன்றாவது பாடலையும் பாட வைத்திருப்போம் என்று கூறினார்.