திருப்பூர் மாநகர எல்லைக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் போதை ஊசி, போதை மாத்திரை உள்ளிட்ட போதை வஸ்துக்கள் தாராளமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது என பொதுமக்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு புகார் கொடுத்தால், புகார்தாரர்கள் குறித்த விபரங்களை மொபைல் எண்ணுடன், போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்களுக்கு கொடுத்துவிடுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது சம்பந்தமாக வஞ்சிப்பாளைம் பகுதியினர் நம்மிடம் கூறுகையில்.. எங்கள் பகுதியில் போதை ஊசி, போதை மாத்திரை உள்ளிட்ட போதைப் பொருட்கள் சரளமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விற்பனை செய்பவர்கள் விபரங்கள் அனைத்தும் வீரபாண்டி காவல்துறையினருக்கு நன்கு தெரியும். போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்களிடம் மாதம், வாரம் என தவணை முறையில் பணத்தை லஞ்சமாக பெற்றுக்கொண்டு அவர்கள்தான் விற்பனை செய்யச் சொன்னதாகவும் தெரிகிறது. இதனால் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் சிறுவயதிலேயே போதைப் பழக்கத்திற்கு ஆளாகி சீரழிந்து வருகின்றனர். பல குடும்பங்களில் இளைஞர்கள் படிப்பைத் தொலைத்துவிட்டு போதை ஆசாமிகளாக அழைக்கின்றனர்.
இதுசம்பந்தமாக நாங்கள் வீரபாண்டி காவல்துறையினருக்கு ஆதாரங்களுடன் புகார் கொடுத்தால், அவர்கள் எங்களது விபரங்களுடன், மொபைல் எண்ணையும் கொடுத்து விடுகிறார்கள். போதைப் பொருட்கள் விற்பனை செய்யும் நபர்கள், புகார் கொடுத்தவர்களை சந்தித்து போலீஸ் அனுமதியுடன் தான் விற்பனை செய்கிறோம். அவர்களுக்கு கொடுக்க வேண்டியதைக் மாதம் தவறாமல் கொடுக்கிறோம் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என புகார் கொடுப்பவர்களை மிரட்டுகிறார்கள் என்கிறார்கள்.
சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் கொடுக்கும் சொற்ப பணத்திற்கு ஆசைப்பட்டு, எதிர்கால சந்ததியினரை சீரழிக்கும் செயலுக்கு காவல்துறையினரே உடந்தையாக இருப்பதை என்னவென்று சொல்வது… இளைஞர்களின் வாழ்க்கையை சீரழிக்கும் போதைப் பொருட்கள் விற்பனை செய்யும் கும்பல் மீது, திருப்பூர் மாநகர காவல்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் தமிழ்நாடு அரசும், தமிழக காவல்துறையும் போதைப் பொருட்கள் விற்பனையை ஒழிப்பதற்கு எவ்வளவோ முயற்சிகள் மேற்கொண்டாலும், வீரபாண்டி காவல்துறையினர் போல் இருந்தால்.. வேலியே பயிரை மேய்ந்த கதைபோல்தான் ஆகிவிடும் என்கிறார்கள் ஆதங்கத்துடன்..!
மேற்கு மண்டல ஐ.ஜி,திருப்பூர் மாநகர காவல்துறை ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வார்களா ? காத்திருப்போம்… நம்பிக்கையுடன்…!
-ஹரிதாஸ்
மாவட்ட செய்தியாளர்