திமுகவுக்காக டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இணக்கமாக இருக்கத் தயார் என்கிற ரீதியில் பேசியிருக்கிறார் மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை. சமீபத்தில் அதிமுகவின் பொதுச்செயலாளராக பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்ட பிறகு இன்னும் முழுமையாக அந்தப் பதவிக்கான அங்கீகாரம் இன்னும் கிடைக்கவில்லை என கருதுகிறார்கள் அதிமுகவினர்.
ஆகையால் பழனிச்சாமி தரப்பில் தம்பிதுரை அமித்ஷாவை சந்தித்து நாங்கள் வருகிற 2024 பாராளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கடசிக்கு முழுமையான ஆதரவு தர தயாராக இருக்கிறோம். பொதுச்செயலாளராக பழனிச்சாமி தேர்வாகி இருக்கிறார். அதற்கு உங்களது ஒத்துழைப்பு அவசியம். அவரை அங்கீகாரம் செய்வதற்கு உதவுங்கள் என சமாதானம் பேசியிருக்கிறார் தம்பிதுரை.
இதற்கு அமித்ஷா தம்பிதுரையைப் பார்த்து உங்களுக்கு நமது கூட்டணியை ஜெயிக்க வைக்கவோ, பாரதிய ஜனதா கட்சியை ஜெயிக்க வேண்டும் என்கிற எண்ணம் சுத்தமாக இல்லை என வெளிப்படையாக பேசியிருக்கிறார். அதிமுகவைப் பொறுத்தவரை 2026ல் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலை மனதில் வைத்து வேலை செய்கிறீர்கள். 2024ல் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற வேண்டும் என்கிற மனநிலையில் நீங்கள் வேலை செய்யவில்லை. நீங்கள் எங்களோடு ஒத்துழைக்க தயாராகவும் இல்லை என பேசியிருக்கிறார். மேலும் தமிழகத்தில் அதிமுக பெரிய கட்சி. நீங்களாகவே சிக்கலை உருவாக்கி பலவீனப்படுத்தி வைத்திருக்கிறீர்கள்.
தற்போதைய சூழலில் நாங்கள் பழனிச்சாமியையோ, பன்னீர் செல்வத்தையோ ஆதரிக்க எந்த முடிவும் எடுக்க முடியாது. எங்களைப் பொறுத்தவரை அதிமுக பலமாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே கூட்டணி ஜெயிக்கும். இதுதான் இப்போதைக்கு எங்களின் முடிவு என கறாராக பேசி அனுப்பி இருக்கிறார் அமித்ஷா.
அமித்ஷா தம்பிதுரையிடம் பேசி அனுப்பியதை அறிந்த பன்னீர்செல்வம் தரப்பினர் சந்தோஷத்தில் இருக்கிறார்களாம். டெல்லியில் அமித்ஷா, நட்டா தரப்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தை பற்றி தம்பிதுரை பழனிச்சாமியிடம் கூறியிருக்கிறார். கட்சியை பிளவுபடுத்தி பொதுச்செயலாளர் என தனித்து உங்களை அங்கீகரிக்க டெல்லி பாஜக விரும்பவில்லை என கூறியதும். இது எதிர்பார்த்ததுதான் என்றிருக்கிறார் பழனிச்சாமி. பிரதமர் மோடியையும், அமித்ஷாவையும் நான் நேரில் சந்தித்து சரிசெய்து கொள்கிறேன் என அசால்டாக பேசியிருக்கிறார்.
அதிமுகவிலிருந்து பன்னீர் செல்வத்தை ஒதுக்கியதே பாரதிய ஜனதா கட்சியை ஓரங்கட்டுவதற்காகத் தான். அதிமுகவில் பன்னீர் இருப்பது பாஜக இருப்பதற்கு சமம். பன்னீரை ஓரங்கட்டினால் பாஜகவை நாம் ஓரங்கட்டியது போல்தான் என நினைத்துத்தான் பன்னீர் செல்வத்தை கட்சியிலிருந்து ஓரங்கட்டினார்கள் என பிரதமருக்காக தமிழகத்தில் பணிபுரியும் உளவுப்பிரிவினர் மோடிக்கு அறிக்கை அனுப்பியிருந்தார்களாம். இந்த அறிக்கையின்படிதான் தம்பிதுரையிடம் அமித்ஷா பேசியிருக்கிறார் என்கிறார்கள்.
இந்நிலையில் பிரதமர் மோடி தமிழகம் வருகையின் போது அவரைச் சந்தித்து பேசுவதற்காக பிரதமர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு 10 நிமிடங்கள் அனுமதி வாங்கியிருக்கிறார் தம்பிதுரை. அதேபோல் பன்னீர்செல்வமும் பிரதமரைச் சந்தித்து பேசுவதற்காக அவருக்காக பிரதமர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு அவருக்கும் 10 நிமிடங்கள் அனுமதி வாங்கிக் கொடுத்திருக்கிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. ஆனால் பிரதமர் சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கியதும் பழனிச்சாமியுடன் கை குலுக்கியதும், அருகில் இருந்த பன்னீர் செல்வத்திற்கும் கை குலுக்கியிருக்கிறார். பன்னீர் வழக்கம்போல் குனிய டோன்ட் ஒரி என சொன்னாராம். இதனைப் பார்த்த நத்தம் விஸ்வநாதன், கேபி முனுசாமி இருவரும் அப்செட் ஆகியிருக்கிறார்கள்.
அதன்பிறகு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பிரதமர் மோடி இந்த முறை வழக்கத்திற்கு மாறாக தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் இணக்கமாக நடந்து கொண்டுள்ளார். அவருக்கு ஒதுக்கப்பட்ட நேரங்களை விட அதிகமான நேரம் ஸ்டாலினுடன் பேசியிருக்கிறார். மோடியைப் பொறுத்தவரை ஸ்டாலினை எதிரியாகப் பார்க்காமல், எதிர்அணியின் வலுவான தலைவராக பார்த்திருக்கிறார். வருகிற தேர்தலில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால் ஸ்டாலின் உதவியுடன் ஆட்சி அமைக்கலாம் என்கிற மனநிலையில் இருக்கிறார் என்கிறார்கள். 2024 தேர்தலுக்குப் பிறகு இந்திய அரசியலில் ஸ்டாலின் முக்கிய பங்கு வகிப்பார் எனவும் மோடி கருதுவதாக கூறுகிறார்கள். அதன்பிறகு சென்னை விமான நிலையத்திலிருந்து கிளம்பும்போது சந்திப்பதற்காக காத்திருந்த பன்னீர் செல்வத்தையும் பழனிச்சாமியையும் பிரதமர் சந்திக்காமல் கிளம்பி சென்றுவிட்டார். அதன்பிறகு பன்னீர் செல்வத்தை தொடர்பு கொண்ட பாஜக தரப்பினர் நீங்கள் மக்களைச் சந்தித்து கூட்டத்தைக் காட்டுங்கள். உங்கள் செல்வாக்கை நீங்கள் நிரூபித்தால் பாஜக ஒருபோதும் உங்களை கைவிடாது என தைரியம் சொல்லியிருக்கிறார்கள். அதன்பிறகுதான் திருச்சியில் மாநாடு நடத்தும் பணிகளைத் தீவிரப்படுத்தியிருக்கிறார் பன்னீர்செல்வம்.
– சூரிகா