0 1 min 2 mths

தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் விறுவிறுப்பான புலனாய்வு திரில்லர் ‘லெவன்’ திரைப்படத்தின் முதல் பாடலை கமல் ஹாசன் வெளியிட்டுள்ளார். டி. இமான் இசையில் ஷ்ருதி ஹாசன் பாடியுள்ள ‘தி டெவில் இஸ் வெயிட்டிங்’ எனும் பாடலின் வரிகளை முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் திரைப்படத்தின் இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் எழுதியுள்ளார். முன்னணி இசை நிறுவனமான சரிகம இப்பாடலை வெளியிட்டுள்ளது.

‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ மற்றும் ‘செம்பி’ ஆகிய பெரிதும் பாராட்டப்பட்ட வெற்றி படங்களை தொடர்ந்து, விறுவிறுப்பான புலனாய்வு திரில்லரான ‘லெவன்’ திரைப்படத்தை தங்களது மூன்றாவது படைப்பாக ஏ ஆர் எண்டர்டைண்மென்ட் நிறுவனத்தின் சார்பில், அஜ்மல் கான் மற்றும் ரியா ஹரி தயாரிக்கின்றனர்.

இயக்குநர் சுந்தர் சி யிடம் ‘கலகலப்பு 2’, ‘வந்தா ராஜாவா தான் வருவேன், மற்றும் ‘ஆக்ஷன்’ ஆகிய திரைப்படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய லோகேஷ் அஜில்ஸ் இந்த திரைப்படத்தை இயக்குகிறார்.

முதல் பாடலான ‘தி டெவில் இஸ் வெயிட்டிங்’ குறித்து இயக்குநர் பேசுகையில், உற்சாகம் மிகுந்த இந்த பாடல் உயர் தரத்தில் முழுக்க ஆங்கிலத்தில் உருவாகியுள்ளது. டி. இமானின் இசையும் ஷ்ருதி ஹாசனின் குரல் வளமும் பாடலுக்கு மிகப்பெரிய பலமாகும். நாயகன் மற்றும் வில்லனைக் குறித்த பாடலாக இது அமைந்துள்ளது. இந்த பாடல் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்று திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பை உருவாக்கும் என்று நம்புகிறோம் என்றார்.

தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் நவீன் சந்திரா நாயகனாக நடிக்கிறார். ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’, ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ இணையத் தொடர், ‘சரபம்’, ‘சிவப்பு’ மற்றும் சசிகுமாரின் ‘பிரம்மன்’ உள்ளிட்டவற்றில் நடித்துள்ள இவர், ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’ திரைப்படத்தில் எதிர் நாயகனாக தற்போது நடித்து வருகிறார்.

‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்தில் நடித்துள்ள ரியா ஹரி நாயகியாக நடிக்கும் இப்படத்தில் ‘விருமாண்டி’ புகழ் அபிராமி, ஆடுகளம் நரேன், ‘வத்திக்குச்சி’ புகழ் திலீபன்,  ‘மெட்ராஸ்’ புகழ் ரித்விகா, அர்ஜை உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கான இசையை டி. இமான் அமைக்க, பாலிவுட்டில் பணியாற்றிய அனுபவமுள்ள கார்த்திக் அசோகன் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். படத்தொகுப்புக்கு தேசிய விருது பெற்ற ஸ்ரீகாந்த் என்.பி. பொறுப்பேற்றுள்ளார்.

‘லெவன்’ திரைப்படம் குறித்த மேலும் தகவல்களை பகிர்ந்து கொண்ட இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ், ஆரம்பம் முதல் இறுதி வரை பார்வையாளர்களை இருக்கையின் நுனிக்கே கொண்டு வரும் விறுவிறுப்பான புலனாய்வு திரில்லராக ‘லெவன்’ அமையும். திறமைமிக்க நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்திற்காக இணைந்துள்ளார்கள். அனைவரையும் கவரும் விதத்தில் திரைப்படம் அமையும் என்று நம்புகிறேன் என்று கூறினார்.

ஏ ஆர் என்டர்டைன்மென்ட் பேனரில் அஜ்மல் கான் மற்றும் ரியா ஹரி தயாரிப்பில் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் திரைப்படமான ‘லெவன்’ படத்தை நவம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *