மாவட்ட ஆட்சித்தலைவர் தா.கிறிஸ்துராஜ். ( இ.ஆ.ப ) தலைமையில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சாலைப்பாதுகாப்பு குறித்து, மாதாந்திர ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தா.கிறிஸ்துராஜ், இ.ஆ.ப., பேசுகையில், தமிழ்நாடு முதலமைச்சர், சாலை விபத்தில்லா தமிழ்நாட்டை உருவாக்கும் வகையில் பல்வேறு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார். அந்த வகையில் இன்றைய தினம், திருப்பூர் மாவட்டத்தில் சாலைப் பாதுகாப்பு குறித்து மாதாந்திர ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
மேலும், பொதுமக்களிடையே சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, விபத்துகளை தவிர்க்கும் நோக்கில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தொடர்ச்சியாக விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, விபத்துக்கான காரணங்களாக இருச்சக்கர வாகனங்களில் ஓட்டுநர் மற்றும் பின்னால் அமர்ந்து இருப்பவர் இருவரும் தலைகவசம் அணியாதது, வாகனம் ஓட்டும் போது அலைபேசியை பயன்படுத்துவது, மோட்டார். கார் போன்ற நான்கு சக்கர வாகனங்களில் சீட்பெல்ட் அணியாதது வலியுறுத்தி சாலைகளின் முக்கிய இடங்களில் விழிப்புணர்வு விளம்பர பதாகைகள் நெடுஞ்சாலைகள் துறையின் சார்பில் வாகன ஓட்டிகள் எளிதில் அறியும் வண்ணம் வைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், சாலை வளைவுகள். சாலை சந்திப்புகள். குறுகிய சாலைகள். போக்குவரத்து நெரிசல் மிக்க இடங்கள் போன்ற பகுதிகளில், அதிக வேகம் காரணமாக விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும் சாலைகளில் எதிர் திசையில் வாகனத்தை ஓட்டுவதாலும், சாலைகளில் செல்லும் போது உரிய செய்கை இல்லாமல் வாகனத்தை திருப்புவதாலும், சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, சமந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்கள் சாலை பாதுகாப்பு குறித்து தொடர் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
சாலை விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் கொடுங்காயங்களின் விளைவாக மன அளவிலும், பொருளாதார நிலையிலும் பல குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன. எனவே, சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வில் அனைத்து மக்களின் பங்களிப்பும் மிக முக்கியமானதாகும். திருப்பூர் மாவட்டத்தை சாலை விபத்தில்லா மாவட்டமாக மாற்ற வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்கள் முனைப்புடன் செயல்படவேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.