நீலகிரி மாவட்டம் கூடலூர் தொகுதிக்குட்பட்ட பந்தலூர் தாலுக்கா, சேரம்பாடி பஜாரில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. ( கடை எண் : 8225 ) இந்த டாஸ்மாக் கடை கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இதே பகுதியில் செயல்பட்டு வந்தபோது, பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த காரணத்தால் கோரஞ்சால் பகுதிக்கு மாற்றம் செய்தனர்.
இந்நிலையில் கடந்த 16.08.2024 அன்று மீண்டும் சேரம்பாடி பஜாரில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடை இருக்கும் இடத்திற்கு அருகில் அரசு பள்ளிகள் , தனியார் மருத்துவமனைகள் , தனியார் பள்ளிகள், அனைத்து மதத்தினரும் வழிபடும் வழிபாட்டு தலங்கள் என அனைத்தும் இயங்கி வருகிறது. குறிப்பாக டாஸ்மாக் கடை இருக்கும் இடத்தில் கடையின் இருபுறங்களிலும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, தனியார் மருத்துவமனை செயல்படுகிறது.
பஜார் பகுதி என்பதால் பொதுமக்கள் பலரும் பொருட்களை வாங்குவதற்காக அந்த பகுதியை அதிகமாக பயன்படுத்துவது உண்டு, மது பிரியர்கள் பகல் நேரத்தில் குடித்து விட்டு பல அட்டகாசங்களை செய்து வருவதாக பலர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். குறிப்பாக பள்ளி செல்லும் மாணவர்கள் , சிகிச்சைக்காக வரும் பெண்கள் என பலர் இந்த இடத்தை கடக்க பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாக புகார் எழுந்துள்ளது. ஏற்கனவே பள்ளிக்கூடங்கள், வழிபாட்டுத்தலங்கள் இருக்கும் காரணத்தால்தான் பொதுமக்கள் நலன் கருதி இந்த டாஸ்மாக் கடை மாற்றம் செய்யப்பட்டது.
இந்த பகுதியில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வனவிலங்குகள் நடமாட்டம் இருந்து வந்தது , அப்படி ஒருநாள் இந்த வழியாக வந்த யானை, மது குடித்துக் கொண்டிருந்த இருவரை தாக்கியது , யானை தாக்கியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார். அந்த சம்பவத்திற்கு பிறகு டாஸ்மாக் கடை உடனடியாக வேறு இடத்திற்கு மாற்றம் செய்தனர். மேலும் மது குடித்து விட்டு போதையில் அவ்வப்போது தகராறு செய்வதால் வாகன ஓட்டிகள் முதல் நடந்து செல்பவர்கள், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த பிரச்சனை சம்பந்தமாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் சம்பந்தப்பட்ட கூடலூர் அதிமுக எம்.எல்.ஏ பொன். ஜெயசீலனும் இதனை கண்டுகொள்ளவில்லை. பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத, இடையூறாக இருக்கும் டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றம் செய்வதில் அரசுக்கு என்ன பிரச்சனை இருக்கிறது என்பதே தெரியவில்லை.
டாஸ்மாக் கடை வேறு இடத்திற்கு மாற்றம் செய்வது தொடர்பாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட இடத்தை உடனடியாக ஆய்வு மேற்கொண்டு, பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என அனைவருடைய பாதுகாப்பு நலன் கருதி கடையை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதியினரின் கோரிக்கையாக உள்ளது.