உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு நீண்ட நாட்களாக, பெரும் சவாலாக இருந்து வந்த பலே கில்லாடியான ரேஷன் அரிசி கடத்தல் மன்னன் போண்டா மணியை, ஆய்வாளர் தாம்சன் சேவியர், தனிப்படை உதவி ஆய்வாளர் பிரதீப் உள்ளிட்ட தனிப்படை போலீசார் கைது செய்ததோடு, ஐந்தரை டன் ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்துள்ளனர். போண்டா மணியின் கைது சம்பவம் ரேஷன் அரிசி கடத்தல் கும்பல் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
உணவுப் பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், ஆய்வாளர் தாம்சன் சேவியர் தலைமையில், உதவி ஆய்வாளர் பிரதீப் உள்ளிட்ட தனிப்படை போலீசார், செங்குன்றம் காந்தி நகர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது நெமிலிச்சேரி நோக்கி வந்த ஈச்சர் வாகனத்தை மடக்கிப் பிடித்து சோதனை செய்ததில், 5100 கிலோ ( 5.1 டன் ) ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்துள்ளது. உடனடியாக அந்த ரேஷன் அரிசியின் உரிமையாளர்களான செங்குன்றத்தைச் சேர்ந்த போண்டா மணி ( எ ) மணிவண்ணன், பிரேம் குமார் மற்றும் வாகன ஓட்டுநரான காஞ்சிபுரம் கவியரசன் ஆகிய மூவரையும் கைது செய்து, ஐந்தரை டன் ரேஷன் அரிசி மூட்டைகள், கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.
பின்னர் கைது செய்யப்பட்டுள்ள மூவரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சுந்தரராமன் என்பவரிடம் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு செல்வதாக வாக்குமூலம் அளித்துள்ளனர். தனக்கு ரேஷன் அரிசி கடத்தி வந்தவர்கள் போலீசாரிடம் சிக்கிய தகவல், சுந்தரராமனுக்கு தெரியவந்ததும் அவர் தலைமறைவாகிவிட்டாராம். தலைமறைவான சுந்தரராமனை பிடிக்க, தனிப்படை அமைத்து தேடி வருவதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
பொதுமக்களுக்கு தமிழ்நாடு அரசு மானியமாக வழங்கும் ரேஷன் அரிசியை கடத்தி, அதிக விலைக்கு விற்பனை செய்யும் கடத்தல் கும்பலை தடுத்து நிறுத்த, தமிழ்நாடு அரசு உணவுப் பொருட்கள் தடுப்பு பிரிவுக்கு அவ்வப்போது புதிது புதிதாக அதிகாரிகளை நியமனம் செய்கிறது. எத்தனை அதிகாரிகள் வந்தாலும், கடத்தல் தொழிலை பல வருடங்களாக மேற்கொள்ளும் ரேஷன் அரிசி வியாபாரிகளை முற்றிலுமாக ஒழிக்க முடியவில்லை என்பதுதான் வேதனையின் உச்சம்.