விக்ரம் நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘தங்கலான்’. விக்ரம் போன்ற ஒரு நட்சத்திர நடிகரின் அர்ப்பணிப்புடன் கூடிய கடும் உழைப்பை அனைவரும் வியந்து பார்த்து ரசித்து பாராட்டுகிறார்கள். இந்த தருணத்தில் சீயான் விக்ரம் ‘தங்கலான்’ படத்தின் வெற்றிக்காக படத்தில் கடினமாக பணியாற்றிய அனைத்து நடிகர்கள், நடிகைகள், உதவி இயக்குநர்கள், கலை இயக்குநர்கள் , அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்பினார்.
இதனைத் தொடர்ந்து சென்னை கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தின் வளாகத்தில் உள்ள கலையரங்கத்திற்கு வருகை தந்த 500-க்கும் மேற்பட்டவர்களை சீயான் விக்ரம் வரவேற்றதோடு, படத்தில் கடுமையாக உழைத்ததற்காக அங்கு வருகை தந்த அனைவருக்கும் முதலில் தம்முடைய நன்றியை தெரிவித்துள்ளார். இதற்கு முன் ‘தங்கலான்’ படக்குழுவினருக்கு மிகவும் பிடித்த உணவு வகைகளை, அவர்களிடமே கேட்டு அறிந்து தேர்வு செய்து, அந்த உணவு வகைகளை பிரபலமான சமையல் கலை நிபுணர் மாதம்பட்டி ரங்கராஜிடம் வழங்கியிருந்தார். அவருடைய கைப்பக்குவத்தில் உருவான சிறப்பு விருந்தினை தன்னுடைய நன்றியினை தெரிவிக்கும் வகையில் படத்தில் பணியாற்றியவர்களுக்கும், அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் தனது கையாலேயே உணவினை பரிமாறியுள்ளார்.
விக்ரமின் இந்த செயலால் படத்தில் பணியாற்றிய அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். குறிப்பாக தொழிலாளர் குடும்ப உறுப்பினர்கள் சீயான் விக்ரமுடன் பேசி மகிழ்ந்ததுடன், செல்ஃபியும் எடுத்துக் கொண்டனர்.
இந்த நிகழ்வில் சீயான் விக்ரமுடன் ‘தங்கலான்’ படத்தில் நடித்த நடிகைகள் மாளவிகா மோகனன், பார்வதி, நடிகர் பசுபதி, படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் திருமதி. நேகா ஞானவேல் ராஜா, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் தந்தை கே. ஈஸ்வரன், ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தனஞ்ஜெயன், இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
பொதுவாக ஒரு திரைப்படம் வெற்றி பெற்றால், வெற்றி பெற செய்தமைக்காக ரசிகர்களுக்கு படக்குழுவினர் நன்றி தெரிவிப்பது வழக்கம், ஆனால், விக்ரம் ‘தங்கலான்’ பட வெற்றிக்காக அப்படத்தில் கடுமையாக உழைத்தவர்களையும், அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் ஒருங்கிணைத்து, விருந்தோம்பல் செய்து, நன்றி தெரிவித்தது, அனைவரது கவனத்தையும் கவர்ந்ததுடன் ஆச்சரியத்தையும் அளித்ததுள்ளது. ஆனால் இதில் என்ன வேடிக்கை என்றால், படக்குழுவினர் அனைவரையும் வரவழைத்து நன்றி தெரிவித்த நடிகர் விக்ரம், படத்தின் இயக்குநர் ப. ரஞ்சித் பெயரை மறந்தாரா ? அல்லது புறக்கணித்தாரா ? என விருந்துக்கு வந்தவர்கள் புலம்பிக்கொண்டே நகர்ந்து சென்றனர்.