அதிமுக செயற்குழு கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் முதல்வர் ஜெயக்குமார், அண்ணாமலையை விமர்சித்துப் பேசினார்.
அதிமுக- பாஜக தலைவர்கள் இடையே மோதல் தொடர்ந்து வரும் நிலையில், இன்று அதிமுக செயற்குழு கூடியது. எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராகத் தேர்வான பிறகு நடக்கும் முதல் செயற்குழு கூட்டம் இதுவாகும்.
அதிமுக தலைமைக் கழகத்தில் நடந்த இந்த செயற்குழு கூட்டம் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற்றது. இதில் திமுக அரசைக் கண்டித்து உட்பட மொத்தம் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
ஜெயக்குமார்: அதிமுக செயற்குழு கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், அண்ணாமலையை விமர்சித்துப் பேசியிருந்தார். அண்ணாமலையின் அரசியல் வாழ்க்கை வெறும் 2 ஆண்டுகள் தான் என்றும் அண்ணாமலை அரசியலில் ஒரு கத்துக்குட்டி என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.
எடப்பாடி கூறியதை போல அவர் ஒரு முதிர்ச்சியில்லாத தலைவர் என்றும் அண்ணாமலையைக் கண்டு அச்சப்பட வேண்டிய அவசியம் அதிமுகவுக்கு இல்லை என்றும் அவர் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், “அண்ணாமலை பாஜக தலைவராக உள்ளார். எடப்பாடி கூறியதை போல அரசியல் முதிர்ச்சி இல்லாமல் அவர் பேசி வருகிறார். எங்க அரசியல் வாழ்க்கையைப் பாருங்கள். நாங்கள் 30, 40 ஆண்டுகள் அரசியலில் இருந்துள்ளோம். ஆனால், அவர் வெறும் இரண்டு ஆண்டுகள் தான் அரசியலில் இருந்துள்ளார்.
அரசியலில் அவர் ஒரு கத்துக்குட்டியை போன்றவர். முதிர்ச்சி இல்லாமல் பேசுபவர் கருத்துக்கு எல்லாம் பதில் சொல்லிக் கொண்டு இருக்க முடியாது.. அதிமுகவும் பாஜகவும் கூட்டணியில் இருக்கிறது. இதன் காரணமாகவே மாநில தலைவர் என்ற முறையில் அவரை பேசி வருகிறோம். வளர்த்தி கிடா மார்பில் பாய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த விவகாரத்தில் நாங்கள் ரொம்பவே தெளிவாக இருக்கிறோம்.
அண்ணாமலை ஏன் பேயா, பிசாசா.. அவரை கண்டு பயப்பட.. நாங்கள் பல அடக்குமுறைகளை நிறைந்த கருணாநிதி ஆட்சிக் காலத்தையே பார்த்தவர்கள். அதிமுகவை எப்படியாவது ஒழித்துக் கட்ட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு வேலை செய்தார்கள். ஏகப்பட்ட பொய் வழக்குகளைப் போட்டார்கள். ஆனால், அதையெல்லாம் தாண்டி அதிமுக மிகப் பெரிய மக்கள் இயக்கமாக உள்ளது. எனவே, யாரைக் கண்டும் பயப்பட வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை” என்று அவர் தெரிவித்தார்.
எடப்பாடி தாக்கு: அண்ணாமலைக்கும் அதிமுக தலைவர்களுக்கும் இடையே வார்த்தை மோதல் தொடர்ந்து வருகிறது.முன்னதாக நேற்றைய தினம் எடப்பாடி பழனிசாமி, “அண்ணாமலை கற்பனை கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. நான் கட்சிக்கு வந்து 30 ஆண்டுகள் ஆகிறது. அவர் சும்மா பேட்டி கொடுத்து பெரிய ஆள் ஆக வேண்டும் என நினைக்கிறார். தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளவே அவர் இப்படிப் பேசி வருகிறார். முதிர்ந்த அரசியல்வாதி கருத்து குறித்துக் கேட்டால் பதில் சொல்லலாம். அவர் குறித்து எந்தவொரு கேள்வியும் கேட்க வேண்டாம்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.