0 1 min 4 mths

இந்திய பாதுகாப்புத்துறை  அமைச்சர் ராஜ்நாத் சிங், சென்னையில், இந்திய கடலோர காவல்படையின் புதிய அதிநவீன கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தை (MRCC) இன்று திறந்து வைத்தார். அத்துடன் சென்னை துறைமுக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள பிராந்திய கடல் மாசுக்கட்டுப்பாட்டு மையத்தையும் (RMPRC), புதுச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள கடலோர காவல்படை விமான தள வளாகத்தையும் அவர் காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.

சென்னை நேப்பியர் பாலம் அருகே சுமார் ரூ.26.10 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்திய கடலோர காவல்படை கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம், கடலில் தத்தளிக்கும் மாலுமிகள்,  மீனவர்கள் போன்றோரை மீட்பதற்கான பணிகளை உடனடியாக மேற்கொள்ள உதவும். இது, தகவல்களை தரைவழி மற்றும் செயற்கைக்கோள் வசதிகள் மூலமாக பெற்று உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் நிறுவப்பட்டுள்ளது. தேடல் மற்றும் மீட்பு நடைமுறைகள், கப்பல் போக்குவரத்து போன்றவற்றில் அதிக அனுபவம் பெற்ற இந்திய கடலோர காவல்படையின் பணியாளர்கள் இதில் எந்நேரமும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இப்புதிய மையம் இந்தியாவின் கிழக்கு கடற்கரை மற்றும் அதற்கு அப்பால் உள்ள அனைத்து கடல்சார் மீட்பு நடவடிக்கைகளையும் ஒருங்கிணைத்து, மீனவர்கள் மற்றும் மாலுமிகளின் பாதுகாப்பு மற்றும் நலன்களை உறுதி செய்வதற்கான மையமாக செயல்படும்.

பாதுகாப்புத்துறை அமைச்சர்  ராஜ்நாத் சிங், சென்னை துறைமுக வளாகத்தில், இந்திய கடலோர காவல்படையின் பிராந்திய கடல் மாசுக்கட்டுப்பாட்டு மையத்தையும் திறந்து வைத்தார். இது, இந்தியப் பெருங்கடலையொட்டிய கடலோரப்பகுதிகளில் கடல் மாசுபாடு, குறிப்பாக எண்ணெய் மற்றும் இரசாயன மாசுபாட்டினை கட்டுப்படுத்துவதற்குரிய முக்கிய வசதியாகும். இந்தியப் பெருங்கடல் பகுதியில் (IOR) கடல் மாசுபாட்டை அகற்றும் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக இம்மையம் சென்னையில் அமைக்கப்படுவது பற்றிய அறிவிப்பை, 22 நவம்பர் 2022 அன்று கம்போடியாவில் நடைபெற்ற முதல் இந்திய-ஆசியான் கூட்டத்தின் போது பாதுகாப்புத்துறை  அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்திருந்தார். எண்ணெய் மாசுபாடு போன்ற நிகழ்வுகளை கண்காணிக்க இம்மையத்தில் கடலோர காவல்படை பணியாளர்கள் 24 மணி நேரமும் செயல்படுவர். எண்ணெய் கையாளும் முகமைகள், அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் பங்கேற்பாளர்கள் போன்ற பல்வேறு நிறுவனங்களுக்கு மாசு எதிர்ப்பு நுட்பங்கள் குறித்த பயிற்சியையும் இந்த மையம் வழங்கும். இது தவிர, கடலில் எண்ணெய் மாசுபாட்டை அகற்றுவது குறித்து நட்பு நாடுகளைச் சேர்ந்த பயிற்சியாளர்களுக்கும் இம்மையம் பயிற்சி அளிக்கும்.

பாதுகாப்புத்துறை  அமைச்சர் ராஜ்நாத் சிங், புதுச்சேரியில் உள்ள கடலோர காவல்படை விமான தள வளாகத்தை காணொலி வாயிலாக திறந்து வைத்தார். இது இந்திய கடலோர காவல் படைக்கு ஒரு மிகச்சிறந்த கடடமைப்பாக அமைகிறது. புதுச்சேரி மற்றும் தென் தமிழக கடற்கரையோரங்களில் கடல் பாதுகாப்பில் இது முக்கிய பங்கு வகிக்கும். இவ்வளாகத்தில் சேத்தக் மற்றும் அட்வான்ஸ்டு லைட் ஹெலிகாப்டர் (ஏஎல்எச்) நிறுத்தப்பட்டிருக்கும். இந்த இரண்டு ஹெலிகாப்டர்களும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டவையாகும். கடல் ரோந்து, தேடுதல் மற்றும் மீட்பு போன்ற பணிகளை இவை மேற்கொள்ளும் திறன் கொண்டவை.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, மக்கள் பிரதிநிதிகள், மத்திய-மாநில அமைப்புகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மற்றும் நட்பு நாடுகளைச் சேர்ந்த விருந்தினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *