தமிழ் திரையுலகில் நகைச்சுவை மூலம் மக்களை மகிழ்ச்சி படுத்திய நடிகர்களில் முக்கியமான நபர் நடிகர் கவுண்டமணி. இவரது நகைச்சுவை காட்சிகளைப் பார்த்து ரசித்து சிரிக்காதவர்கள் யாராவது இருக்க முடியுமா என்றால், எவரும் இல்லை என்றே பதில் வரும். அந்தளவிற்கு இவரது கவுண்டமணி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
பல வருடங்களாக நடிப்பிற்கு முழுக்குப் போட்டுவிட்டு குடும்ப உறவுகளுடன் சந்தோஷமாக நாட்களை கழித்து வந்த நடிகர் கவுண்டமணியிடம், பல இயக்குனர்கள் அழைத்தும் நடிக்க மறுத்து வந்தார். ஆனால் இனி நடிக்கவே கூடாது என்கிற மனநிலையில் இருந்துவந்த கவுண்டமணியின் மனதை மாற்றியிருக்கிறார் அவருடன் நீண்ட காலமாக பயணித்த ராஜ கோபால் என்பவர்.
இந்த ராஜ கோபால் தான் பல வருடங்களாக கவுண்டமணிக்கு நகைச்சுவை ட்ராக் எழுதி வந்தாராம். இவர் தற்போது முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்த கதையை “ஒத்த ஓட்டு முத்தையா” என்கிற தலைப்பில் கதை சொல்லியிருக்கிறார். அந்த கதையைக் கேட்டதும் மீண்டும் நடிப்பைத் தொடர வேண்டும் என்கிற ஆசை கவுண்டமணியின் மனதில் எழுந்துள்ளது. இதற்கான வேலைகளும் ஜரூராக நடைபெற்று வருகிறதாம்.
இந்த தகவலை சமீபத்தில் கவுண்டமணியின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவிக்க வருகைதந்த முக்கியமான பத்திரிகையாளர்களிடம் நடிகர் கவுண்டமணி தெரிவித்துள்ளார். இந்த தகவலை அங்கிருந்த இயக்குனர் ராஜ கோபாலும் உறுதிப்படுத்தியுள்ளார்.