
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் வசிக்கும் வருண் என்பவர் கடந்த தனது இருசக்கர வாகனத்தை அவர் பணிபுரியும் தனியார் நிறுவனத்ற்கு வெளியே நிறுத்திவிட்டு வேலைக்கு சென்றுள்ளார். பின்னர் அவர் மறுதினம் வந்து பார்த்தபோது அவரது இரு சக்கர வாகனத்தை அடையாளம் தெரியாத நபர்களால் திருடப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது. இது சம்மந்தமாக பாதிக்கப்பட்ட நபர் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதேபோல், வாகராயம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஹரிபிரசாத் சில மாதங்களுக்கு முன், பணியை முடித்துவிட்டு இரவு அவரது இரு சக்கர வாகனத்தை வீட்டிற்கு வெளியே நிறுத்திவிட்டு சென்றுள்ளார். பின்னர் மறுநாள் காலையில் வீட்டிற்கு வெளியே வந்து பார்த்தபோது, இரு சக்கர வாகனத்தை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இது சம்மந்தமாக பாதிக்கப்பட்ட நபர் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேற்படி புகார்களின் மீது நடவடிக்கை எடுத்து, குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்குமாறு, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவிட்டதன் பேரில், கருமத்தம்பட்டி காவல்துறையினர் தீவிர புலன்விசாரணை மேற்கொண்டுள்ளனர். பின்னர் இருசக்கர வாகன திருட்டு வழக்குகளில் சம்மந்தப்பட்ட நபர்களை தேடி வந்த நிலையில், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சீனிவாசன் மகன் நாகராஜ் (26), சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த இன்பராஜ் மகன் பிரகாஷ் (25) மற்றும் பெருமாள் மகன் சசிகுமார் (26) ஆகிய மூவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டதில், மேற்படி இருசக்கர வாகன திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் தனிப்படை போலீசார் மேற்படி குற்றவாளிகளிடமிருந்து கருமத்தம்பட்டி பகுதியில் திருடு போன இரண்டு இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்ததோடு, வாகன திருட்டில் ஈடுபட்ட மூவரையும் கைதுசெய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தியுள்ளனர். இந்நிலையில் சட்டத்திற்கு புறம்பாக குற்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால், சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
– ரமேஷ்
கோவை செய்தியாளர்