0 2 yrs

தமிழ் திரையுலகில் பிரமாண்டமான பொருட்செலவில் படங்களை தயாரிக்கும் “லைகா” நிறுவனத்தில் கடந்த 16 ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தார்கள். பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த நடிகர் நடிகைகளுக்கு சம்பளம் கொடுத்த வகையில், சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக அதிகாரிகளுக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து சட்ட விரோத பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு அதிகாரிகள் சோதனை செய்திருக்கிறார்கள்.

இந்த சோதனையின் போது சிக்கிய ஓர் ஆவணம் அனைவரையும் அதிர வைத்திருக்கிறது. அந்த ஆவணத்தில் ரஜினியின் பெயரைக் குறிப்பிட்டு ஐம்பது கோடி என எழுதப்பட்டிருந்ததாம், நெருக்கடியான நேரத்தில் ரஜினி கேட்டதாகவும், ஒரே இரவில் மொத்த பணத்தையும் ஏற்பாடு செய்து கொடுத்ததாகவும், விசாரணையில் தெரியவந்ததாம். ஆனால் லைகா நிறுவனம் தரப்பில் அதுகுறித்து வாய்திறக்க மறுக்கிறார்களாம். ரஜினியை காப்பாற்றத்தான் இந்த மௌனம் என நினைக்கிறார்கள் அதிகாரிகள்.

மேலும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதிக்கு நெருக்கமான இரண்டு நபர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தியிருக்கிறது அமலாக்கத்துறை. ராஜா அண்ணாமலைபுரத்திலிருக்கும் ஒரு வீட்டிலிருந்து முக்கிய ஆவணங்கள் சிக்கியிருக்கிறதாம். உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையை நடத்திவரும் பாபு என்பவர் அலுவலகத்தில் சோதனை நடத்திய அதிகாரிகள், அவரை நேரில் வரவழைத்தும் விசாரித்திருக்கிறார்கள்.

லைகா நிறுவனத்தின் நிர்வாகி அமலாக்கத்துறையிடம் அளித்த வாக்குமூலத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்துடனான சில பணப்பரிமாற்ற விவரங்களும் இருப்பதாக கூறுகிறார்கள் சில அதிகாரிகள். ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்திலிருந்து தான் விலகிவிட்டதாகச் சொல்லியிருக்கிறார் உதயநிதி, ஆனாலும் அமலாக்கத்துறையின் பிடி அந்த நிறுவனத்தை நோக்கி இறுகுவதாகத் தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *