திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ளது செம்மிபாளையம், இப்பகுதியில் உள்ள ராஜகணபதி நகரில் வசித்து வருபவர் தங்கமணி (53). விவசாயியான இவருக்கு இரண்டு மூத்த சகோதரர்கள் உள்ளனர். மேலும் இவர்களுக்கு சுமார் 2 அரை கோடி மதிப்பிலான பூர்வீக சொத்து கே. அய்யம்பாளையத்தில் க.ச. எண் 324/2 ல் உள்ளது. இந்நிலையில் மேற்படி பூமியை விற்க மூவரும் முடிவெடுத்து கடந்த 2011 ஆம் ஆண்டு கோவையை சேர்ந்தப் ஜோமி.டி.ஜோசப் என்பவருக்கு பொது அதிகார பத்திரத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளனர்.
இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மேற்படி பொது அதிகாரப்பத்திரம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தங்கமணிக்கு தகவல் கிடைத்தது. தகவலையடுத்து ரத்துப்பத்திர நகலை பெற்று பார்த்தபோது தங்கமணி அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார். பத்திரத்தில் தங்கமணி காலமாகிவிட்டதாக பதிவு செய்யப்பட்டிருந்தது. மேலும் பத்திரப்பதிவை பல்லடத்தை சேர்ந்த வழக்கறிஞர் ராஜேஷ் என்பவர் மூலமாக தயாரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பத்திரத்தில் இதற்கு சாட்சியாக ஆராக்குளம் அரசுப்பள்ளி ஆசிரியை சுலோச்சனா என்பவரும், அனுப்பட்டியை சேர்ந்த சுப்பிரமணியம் என்பவரும் சாட்சிக்கையெழுத்திட்டுள்ளனர். மேலும் பல்லடம் சார் பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளர் பாலமுருக பிரபாகர் பதிவு செய்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த தங்கமணி உயிரோடு இருக்கும் தன்னை இறந்ததாக கூறி மோசடியாக பத்திரப்பதிவு செய்த தனது சகோதரர் சாமிநாதன் மற்றும் உடந்தையாக பாத்திரத்தை தயாரித்த வழக்கறிஞர் பல்லடத்தை சேர்ந்த ராஜேஷ் மற்றும் சாட்சி கையெழுத்திட்ட ஆசிரியை சுலோச்சனா மற்றும் சுப்பிரமணியம் ஆகியோர் மீது தமிழ்நாடு பத்திரப்பதிவுத்துறை சென்னை, பார் கவுன்சில், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மாவட்ட கல்வி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு புகார் மனு அளித்துள்ளார். மேலும் பத்திரப்பதிவில் சொத்தில் பங்கிருக்கும் ஒருவர் இறந்துவிட்டால் இறப்புச்சான்று, வாரிசுச்சான்று போன்ற சான்றிதழ்களை இணைக்க வேண்டும். எவ்வாறு பதிவாளர் மேற்படி பத்திரப்பதிவில் இறப்புச்சான்றோ, வாரிசுச்சான்றோ இல்லாமல் சார்பதிவாளர் பாலமுருக பிரபாகர் பதிவு செய்தார் என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
மேலும் சட்டம் படித்து பல்வேறு முக்கிய வழக்குக்களை கையாண்டு கொண்டிருக்கும் வழக்கறிஞர் ராஜேஷ் எவ்வாறு இது போன்று அடிப்படை சான்றில்லாமல் பத்திரம் தயாரித்தார்? மேலும் உயிரோடு இருக்கும் ஒருவர் இறந்ததாக அரசுப்பள்ளி ஆசிரியை ஒருவரே சாட்சி அளித்திருப்பது பத்திரப்பதிவுத்துறையையே கேளிக்கூத்தாக்கியுள்ளது. மேலும் சார் பதிவாளர் பாலமுருக பிரபாகர் பல்வேறு புகார்களில் சிக்கி விசாரணை வளையத்தில் இருக்கும் நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு பல்லடம் சார் பதிவாளர் அலுவலகத்தில் திருப்பூரை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரிடம் ரூ.7 லட்சம் ரொக்கமாக பெற்றபோது லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கையும் களவுமாக பிடிபட்டார்.
மேலும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு விசாரணையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் உயிருடன் இருக்கும் விவசாயியை இறந்ததாக கூறி எந்த வித சான்றிதழையும் பெறாமல் சர்வ சாதாரணமாக லஞ்சத்திற்காக பதவியை விற்கும் இது போன்ற அரசு அதிகாரி மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இது குறித்து கருத்து தெரிவித்த பொதுமக்கள் கூறுகையில் வழக்கறிஞர்கள் உயிரோடு இருப்பவர்களை இறந்ததாக கூறி மோசடி செய்வது ஒன்றும் புதிதல்ல எனவும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வழக்கறிஞர் ஒருவர் தனது மனைவி இறந்ததாக கூறி வேறோரு பெண்ணை கொலை செய்து பின்னர் போலீசாரின் விசாரணையில் தெரியவந்து கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார் எனவும் தெரிவித்தனர்.
சட்டத்தின் மீதும் அரசின் மீதும் கல்வித்துறை மீதும் மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட இது போன்ற கூட்டு மோசடியில் ஈடுபடுவர்களுக்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கை.